search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஃப்ஐஆர்"

    • சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த காப்பகத்தில் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்
    • இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி காப்பகம் செயல்பட்டு வந்துள்ளது

    மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கன்னுங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேட்டில் 68 மாணவிகளின் பெயர்கள் இருந்த நிலையில், 42 மாணவிகள் மட்டுமே அங்கு இருந்தனர். மீதமுள்ள 26 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சட்ட விரோதமாக காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த பிரியங்க் கன்னுங்கோ, "இந்தக் காப்பகத்தை மதபோதகர்கள் நடத்தி வந்துள்ளனர். தெருவில் திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான உரிமம் பெறாமல் இதனை நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற கட்டாய படுத்தப்பட்டுள்ளனர். காப்பகத்தில் 6 முதல் 18 வயது நிரம்பிய சிறுமிகள் இருந்தனர். இவர்களில் பலர் இந்துக்கள் என்றும் தெரிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரண்டு பெண் காவலர்களைத் தவிர்த்து இரவில் இரண்டு ஆண் காப்பாளர்களும் விடுதியில் இருந்துள்ளனர். இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இச்சம்வத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×