search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளை சாவு"

    • மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
    • தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாமரத்துபாளையம் அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (46). கூலித் தொழிலாளியான துளசிமணிக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் துளசிமணி கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.

    அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துளசிமணியை பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து துளசி மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக காத்திருந்த உறுப்பு மாற்ற ஆணையத்தின் விதிமுறைப்படி 21-ந் தேதி மாலையில் துளசிமணியின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து துளசிமணியின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை பாதுகாப்பாக எடுக்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தானம் பெறுவதற்காக காத்திருந்த ஒருவருக்கும், 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவருக்கும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. அதேபோல தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    உடல் உறுப்பு தானம் வழங்கிய துளசிமணியின் குடும்பத்தாருக்கு அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வள்ளி சத்யமூர்த்தி நன்றி தெரிவித்ததுடன் துளசி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்படுவது 9-வது முறை என மருத்துவக் கல்லூரி சேகர் தெரிவித்தார்.

    • குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
    • உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    சென்னை:

    காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளான 50 வயது நோயாளி ஒருவர், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் பெருமூளை ரத்த நாள அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது பெண் ஒருவர் அண்மையில் மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.

    அங்கிருந்து 2 மணி நேரத்துக்குள் சென்னைக்கு நுரையீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து தடைகளோ, நெரிசலோ இல்லாமல் உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    இதன் காரணமாக, விரைந்து கொண்டுவரப்பட்ட நுரையீரல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×