என் மலர்
நீங்கள் தேடியது "டைகர் உட்ஸ்"
- உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரராக திகழ்ந்த சாதனையாளர் டைகர் உட்ஸ்
- நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் உட்ஸ்
"பணக்காரர்களுக்கான விளையாட்டு" என கருதப்படும் கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், அமெரிக்காவை சேர்ந்த டைகர் உட்ஸ் (48). இவரது இயற்பெயர் எல்ட்ரிக் டான்ட் உட்ஸ் (Eldrick Tont Woods).
1999 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2004 செப்டம்பர் வரை தொடர்ச்சியாக 264 வாரங்களும், மீண்டும் 2005 ஜூன் மாதம் முதல் 2010 அக்டோபர் வரை தொடர்ச்சியாக 281 வாரங்களும், உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரர் எனும் முதலிடத்திலேயே திகழ்ந்தவர் உட்ஸ்.
இக்கால கட்டங்களில் உட்ஸ், 13 முக்கிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தொழில்முறை கோல்ஃப் விளையாட்டில் தனது 20-வது வயதிலேயே பங்கு பெற தொடங்கிய உட்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு உயர்ரக காலணிகள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான "நைக்" (Nike) உடன் அதன் பிராண்ட் தூதராக (brand ambassador) 1996ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
27 வருடங்களாக தொடர்ந்த "உட்ஸ்-நைக்" கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் உட்ஸ் தெரிவித்திருப்பதாவது:
27 வருடங்களுக்கு முன் உலகின் தலைசிறந்த ஒரு பிராண்டுடன் அதிர்ஷ்டவசமாக இணைந்தேன். அந்த இணைப்பினால், அன்றிலிருந்து இன்று வரை சிறந்த தருணங்களால் என் நினைவுகள் நிரம்புகிறது. நான் அவற்றை கூற தொடங்கினால், அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதற்கு காரணமாக இருந்த ஃபில் நைட் (Phil Knight) எனது நன்றிக்குரியவர்.
நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இந்த இணைப்பின் வழியாக பல பிரமிப்பூட்டும் தடகள விளையாட்டு வீரர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
மக்கள், இது போல் மீண்டும் ஒரு அத்தியாயம் உருவாகுமா என கேட்பார்கள். நிச்சயமாக மற்றொரு அத்தியாயம் உருவாகும்.
இவ்வாறு டைகர் உட்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த பிரிவை குறித்து நைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "27 வருடங்களாக, உலகின் ஒப்பற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான டைகருடன் இணையும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அவர் கோல்ஃப் விளையாட்டை மாற்றியது மட்டுமில்லாமல், அதில் இருந்த பல தடைகற்களை தகர்த்து எறிந்தார். அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளது.
2016லிருந்தே நைக் நிறுவனம், கோல்ஃப் விளையாட்டிற்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலிலிருந்து விலகி கொண்டது குறிப்பிடத்தக்கது.