search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கென்னத் ஸ்மித்"

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    ×