search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார் பல்கலைக்காகம்"

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ×