search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக முதல்வர்"

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
    • திமுக எம்பிக்கள் கூட்டம் குறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 22-11-2024 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

    அப்போது, கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவிப்பு.
    • முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் .

    முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    வரும் ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிப்க்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்கள்.

    இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

    முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமரன் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமரன் திரைப்படத்தை படக்குழுவினர் சிறப்பு திரையில் செய்தனர்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டு சென்ற நிலையில், அமரன் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமரன் திரைப்படத்தை படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர்.

    அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

    பின்னர், திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

    இதுகுறித்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " ஆர்.என்.ரவி ஆளுனரா? ஆரியநரா?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இனவாத கருத்துக்கள், தவறான குற்றச்சாட்டுகளை அவசரகாதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்.

    முதல்வர் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாள் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பது அவருக்கு தெரியும்.

    சமீபத்தில் கூட வடகிழக்கு மாநிலத்தில் அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாத கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது. முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள டெல்லி பயணம்.
    • சாணக்கியபுரியில் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 26ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளார்.

    வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.

    முன்னதாக, 26ம் தேதி சாணக்கியபுரியில் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே இருக்கும் வைகை என்ற தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான்.
    • தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.

    கழக வேட்பாளருக்கு மக்கள் அளித்த வாக்குகள் 1,24,053. தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ம.க வேட்பாளரை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் கட்டுத்தொகையை இழந்திருக்கிறார்கள்.

    திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

    மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். ஆனால், விக்கிரவாண்டியில் ஓர் இடைத்தேர்தல் என்பதுதான் கொஞ்சமும் எதிர்பாராதது.

    புன்னகை மாறாத முகத்துடன் களப்பணியாற்றி வந்த மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் கழகக் கூட்டணிக்காகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தார்.

    பொதுக்கூட்ட மேடையிலேயே மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், முழுமையான அளவில் உடல்நிலை தேறாத நிலையில், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அந்த வேதனையுடன்தான் இந்தத் தேர்தல் களத்தைக் கழகம் எதிர்கொண்டது.

    விக்கிரவாண்டி மக்களுக்குப் புகழேந்தி அவர்கள் செய்த பணிகளைத் தொடரவும், விக்கிரவாண்டி தொகுதி மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்திடவும் கழகத்தின் செயல்வீரரான அன்னியூர் சிவா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    மக்கள் தொண்டராக - கழக வீரராகப் பொதுவாழ்வு அனுபவம் பெற்ற அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களைக் காணொலி வாயிலாக உங்களில் ஒருவனான நான் கேட்டுக்கொண்டேன்.

    கழகத்தின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் முனைவர் க.பொன்முடி, கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் இடைத்தேர்தல் களத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, ஒருங்கிணைப்புப் பணியைச் சிறப்பாக மேற்கொண்டனர்.

    கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு, மாவட்டக் கழகச் செயலாளர்களும் அமைச்சர்களுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஒன்றியங்கள் வாரியாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர்.

    கழகத்தின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர்ச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், சார்பு அணிகளைச் சார்ந்தவர்களும், கழகத் தொண்டர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் களப்பணியாற்றினர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது.

    விக்கிரவாண்டியில் உள்ள 2 இலட்சத்து 34ஆயிரத்து 653 வாக்காளர்களையும் கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

    கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்கள், தமது எழுச்சிமிகு பரப்புரையில், விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படவிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

    திட்டங்களின் பயன்கள் எல்லாருக்கும் கிடைத்திடுவதை உறுதி செய்து, பாகுபாடின்றி அதனைச் செயல்படுத்தி வருகிறோம். இதே விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு காணொலியைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

    அதில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொன்னபோதும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதம் 1000 ரூபாய் தனக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இதுதான் திராவிட மாடல் அரசு.

    ஒருவர் எந்தக் கட்சிக்காரர் என்று பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு வாக்காளரான அவர், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பார்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்கின்ற அரசுதான் உங்களில் ஒருவனான என் தலைமையிலான கழக அரசு.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் வசிக்கின்ற விக்கிரவாண்டி தொகுதியில் சமூகநீதிக் கொள்கை வழியாக அந்தந்தச் சமுதாயங்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பதைத் தொகுதிவாசிகள் மறந்துவிடவில்லை.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்கிற பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கிய தலைவர் கலைஞரின் சமூகநீதிக் கொள்கையால் தலைமுறைகள் கடந்து அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மறக்கவில்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி மக்கள் தந்துள்ள மகத்தான வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

    பட்டியல் இனச் சமுதாயத்திற்கு 18% இடஒதுக்கீடு வழங்கியதுடன், அவர்களின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வழங்கிய தலைவர் கலைஞரின் வழியில், கடந்த மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது.

    இடைத்தேர்தல் பரப்புரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்து வெற்றிக்குத் துணை நின்றார்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கழக வேட்பாளர்களுக்காக அயராது பணியாற்றினர். அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கழகத்தின் வெற்றி வேட்பாளர் - இனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெருமிதத்துடன் பெற்றிருக்கிற திரு. அன்னியூர் சிவா - கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் கௌதம் சிகாமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ஆகியோருடன் அறிவாலயத்தில் என்னையும் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

    வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், மகத்தான வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அறிவாலயத்தில் திரண்டிருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    ஒரே ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றிக்காகவா இத்தனை மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்று கேட்கலாம். இல்லையில்லை.. அந்த ஒரேயொரு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி - மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மீதும் கழகத்தின் மீதும் வைக்கப்பட்ட மலிவான - மட்டமான அவதூறுகள், தி.மு.க.வுக்கு எதிராகக் களத்தில் நின்றவர்களும் - நிற்பதற்குப் பயந்தவர்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள் - இவை எல்லாவற்றையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் கழக நிர்வாகிகளிடமும் தோழமைக் கட்சியினரிடமும் வெளிப்படுகின்ற மகிழ்ச்சிக்கான காரணம்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, களப்பணிகள் தொடங்கிய நிலையில் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

    அதில் ஒவ்வொரு துறை சார்பிலும் மக்களுக்கு நலன் பயக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில் உங்களில் ஒருவனான நான் நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தேன்.

    மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிர்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனை சரிசெய்யும் நேர்மைத் திறமும் நிர்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு. இன்னும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும்.

    முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் - இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து தி.மு.கழகத்திற்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி - சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள், விக்கிரவாண்டி வாக்காளர்கள். இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கையாக்கி, மக்களுக்குத் தொண்டாற்றும் நம் பணியைத் தொடர்ந்திடுவோம்.

    தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

    அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
    • 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், தமிழகத்தில் இடைத்தேரத்லில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

    மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.

    சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.

    விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம்.

    நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது.

    'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

    தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள்.

    பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

    திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

    நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் பயணத்தையும் தொடர்கிறோம். வெற்றிப் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
    • இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:-

    1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தியின் 54-ஆவது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • முதலமைச்சர் முக ஸ்டாலின் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54-ஆவது பிறந்தநாளை நாடு முழுவதும் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ராகுல்காந்தியின் பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் கோவை பரப்புரைக்கு அவர் வந்திருந்தபோது ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோவை பதிவிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த வாழ்த்து பதிவை பகிர்ந்த ராகுல்காந்தி, "என் அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி. எனது ஸ்வீட் பாக்ஸுக்கு காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    கோவையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார்.

    பிறகு, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

    • நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.
    • நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

    நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நீட் ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது திமுக தான்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தோம்.

    ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின்படி நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.

    ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது.

    நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

    தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (20.5.2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கார்த்திக்ராஜா (வயது 27) த/பெ.சுப்ரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.சிவநேசன் (வயது 27) த/பெ.பால்ராஜ் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.
    • ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக.

    சேலம் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தெய்வ சக்தி படைத்த கட்சி அதிமுக. அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது.

    பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது. அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    அதிமுகவை அழிக்க இந்த பூமியில் யாரும் இன்னும் பிறக்கவில்லை. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

    அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி அதிமுக.

    பொய் வழக்குகள் போட்டு கட்சி பணியை முடக்க பார்க்கிறார்கள். திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.

    திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரசும், திமுகவும் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தேன். முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.

    அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. ஒற்றை செங்கல்லை தூக்கி கொண்டு அமைச்சர் உதயநிதி விளம்பரம் செய்கிறார். விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

    விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×