என் மலர்
நீங்கள் தேடியது "பாலஸ்தீன அகதிகள்"
- ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
- 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.
ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.