என் மலர்
நீங்கள் தேடியது "மோனா லிசா ஓவியம்"
- மோனா லிசாவின் "மர்ம புன்னகை" தினந்தோறும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது
- உணவு முக்கியமா அல்லது ஓவியம் முக்கியமா என அந்த அமைப்பினர் கேட்டனர்
15-வது நூற்றாண்டில், இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம், மோனா லிசா (Mona Lisa).
மோனா லிசா ஓவியம், தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின், சியன் (Seine) நதிக்கரையில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மோனா லிசா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் "மர்ம புன்னகை" தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
அந்த ஓவியம் விஷமிகளால் நாசப்படுத்தப்படுவதை தடுக்க, பிரான்ஸ் அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு தடுப்பும், அதை தாண்டி குண்டு துளைக்க முடியாத ஒரு கண்ணாடியும் வைத்து மறைத்துள்ளது.
நேற்று காலை சுமார் 10:00 மணியளவில் இரு பெண்கள் பார்வையாளர்களுடன் கலந்து அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.
திடீரென அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கோப்பையில் இருந்த ஆரஞ்சு நிற சூப்பை மோனா லிசா ஓவியத்தின் மீது வீசினர்.
தொடர்ந்து ஓவியத்திற்கு முன் இருந்த தடுப்பை தாண்டி சென்று ஓவியத்தை ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி உரையாற்ற தொடங்கினர்.
ரிபோஸ்டெ அலிமென்டெய்ர் (Riposte Alimentaire) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அவர்கள், தங்கள் உரையில்,"எது முக்கியம்? ஒரு ஓவியமா? அல்லது ஆரோக்கியமான உணவு மனிதகுலத்திற்கு தொடர்ந்து உணவு கிடைப்பதா? தவறான விவசாய கொள்கைகளால் விவசாயிகள் பரிதாப நிலையில் இழக்கின்றனர்" என கூறினர்.

எதிர்பாராத இந்த செயலை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியினர் அந்த இருவரையும் தப்ப விடாமல் பிடித்தனர்.
அங்கிருந்த பிற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தால் மோனா லிசா ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்தது.
சம்பவம் நடந்த பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த இருவரையும் கைது செய்த பிரான்ஸ் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர், ரசிடா டாடி தனது எக்ஸ் கணக்கில், "மோனா லிசா நமது பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்று. எக்காரணம் கொண்டும் அதற்கு தீங்கு விளைவிப்பது ஏற்கப்பட கூடியது அல்ல" என பதிவிட்டுள்ளார்.