search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபனாச்சி எண் தொடர்"

    • முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்து வரும் எண் அமையும்
    • "24157817, இது பிபனாச்சி நம்பரா?" என ஒரு நிபுணர் சிட்டியிடம் கேட்பார்

    கணித அறிவியலில் "சீக்வென்ஸ்" (sequence) எனப்படும் வரிசைக்கிரமம் முக்கிய இடம் வகிக்கிறது.

    இதில் "பிபனாச்சி வரிசை" (Fibonacci sequence) எனப்படும் வரிசைக்கிரமம் மிகவும் பிரபலமானது.

    இந்த எண் தொடரில், முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்து வரும் எண் அமையும்.

    எடுத்துக் காட்டாக 1,1,2,3,5,8,13,21,34,55... என இது தொடர்கிறது.

    இத்தாலி நாட்டை சேர்ந்த "பிபனாச்சி" எனும் கணித வல்லுனர் உருவாக்கியதாக கூறப்பட்டு அவர் பெயரால் அழைக்கப்பட்டாலும், பிபனாச்சி வரிசைக்கிரமம், கி.மு. 200ல் இந்திய கணித வித்வான் "பிங்கள ஆசார்யா" என்பவரால் சம்ஸ்கிருத கவிதைகளில் சொற்றொடர் கையாளுதல் குறித்து பதிவு செய்யப்பட்டதாகவும் வரலாறு உண்டு.

    2010 அக்டோபர் மாதம் உலகெங்கும் பல மொழிகளில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம், எந்திரன் (Enthiran).

    அறிவியல், ஆன்மிகம், கணினிகள், க்ரைம் ஆகியவற்றில் எண்ணற்ற புத்தகங்களை எழுதிய சுஜாதா, இப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.


    எந்திரன் படத்தில் வசீகரன் எனும் விஞ்ஞானி வேடத்தில் வரும் ரஜினிகாந்த், "சிட்டி" எனும் ரோபோவாக மற்றொரு வேடத்தில் நடித்திருந்தார்.

    இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், வசீகரன், தான் உருவாக்கிய ரோபோவை வல்லுனர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார். அப்போது அதில் பல துறையை சேர்ந்த நிபுணர்கள் அதன் திறனை பரிசோதிக்க பல கேள்விகளை கேட்பார்கள்.

    ஒரு நிபுணர், "சிம்பிளா கேட்கிறேன். 24157817, இது பிபனாச்சி நம்பரா?" என சிட்டியிடம் கேட்பார்.

    அதற்கு சிட்டி, "ஆமா, 22-வது பிபனாச்சி நம்பர். பை தி வே, அது மந்தைவெளி சுப்ரமணியத்துடைய போன் நம்பர்" என நகைச்சுவையாக பதிலளிக்கும்.

    இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த நிலையில், "சிட்டி அளித்திருக்கும் பதில் தவறு. 37-வது பிபனாச்சி எண்தான் 24157817. 22-வது எண் 17711" என சுட்டி காட்டி ஒரு பயனர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


    எழுத்தாளர் சுஜாதா, இயக்குனர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட அனைவரும் எவ்வாறு இதனை கவனிக்க தவறினர் என கேட்டும், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த தவறை கண்டுபிடித்து வெளி உலகிற்கு கூறிய பயனரை பாராட்டியும், சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

    ×