என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்பெயின் பயணம்"
- 'ஹபக் லாய்டு' நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு, எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு, ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
- தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். 12 நாட்கள் வெளிநாட்டில் இருந்த அவர் தமிழகத்துக்கு ரூ.3440 கோடிக்கு தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்து உள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் வாழ்த்துகளையெல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற நான் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பி இருக்கிறேன்.
அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29-ந்தேதி சென்றேன். முதல் நிகழ்வாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களுடன் நிர்வாகிகள் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.
அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கிற பல்வேறு தொழில் குழும நிர்வாகிகள் வந்திருந்தார்கள். ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், 'இன்ஸ்வெஸ்ட் ஸ்பெயின்' என்ற அமைப்பை சார்ந்தவர்களை சந்தித்தேன்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இருக்கக்கூடிய உகந்த சூழல் பற்றி அங்கு எடுத்துச்சொல்லி, மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில், ஸ்பெயின் நாட்டில் செயல்படுகிற முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித் தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று அப்போது கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்கியானா நிறுவனம் உயர்தர வீட்டு கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும், உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம், கன்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்கள் அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனம், சர்வதேச தரத்தில் சாலை கட்டமைப்பு வசதிகள் அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில், உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய கெஸ்ட்ராம் நிறுவனம், ரெயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில் நுட்பத்துடன் செயல்படக்கூடிய 'டால்கோ' நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய் கிற 'எடிவான்' நிறுவனம், உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான 'மேப்ட்ரி' நிறுவனம் ஆகிய நிறுவனங்களோடு, நிர்வாகிகளை நான் சந்தித்தேன்.
இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும், தங்களது தொழில் திட்டங்களை விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களது ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.
இந்த முயற்சிகளின் பயனாக 3440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஹபக் லாய்டு' நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு, எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு, ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்திலே, தங்களது முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்பதிலே நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கிய பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.
உற்பத்தி துறையிலே சீனாவுக்கு மாற்றாக இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தி துறையில், முந்தி செயல்படுகிற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளும் வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தியா பயணிக்கக்கூடிய பாதையில் முந்தி பயணிப்பது மட்டுமல்ல தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதையை வகுத்து செயல்பட்டு வருவதாகவும் முதல் பக்கத்தில் செய்தி போட்டுள்ளது. பாராட்டியும் உள்ளது.
இதுபோன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிக மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- வெளிநாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக வேறு ஏதும் நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
பதில்:- திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். பாராளுமன்ற தேர்தல் இப்போது நெருங்கி வருவதால் அதற்கு பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் சேர்ந்து ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கீதா ஜீவன், ஜெகத் ரட்சகன் எம்.பி., பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, இனிகோ இருதயராஜ், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், புழல் நாராயணன், படப்பை மனோகரன், கோல்டு பிரகாஷ், பம்மல் வே.கருணாநிதி.
அரசு உயர் அதிகாரிகளான தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் ஓரம் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
- பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
- காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன்.
- ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஸ்பெயினின் தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற் கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.
நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும்.
இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.
இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
Wrapped up exhilarating talks with top executives from Spain's industrial giants – #Gestamp, #Talgo, and #Edibon. Convinced them of the boundless opportunities in Tamil Nadu, India's manufacturing powerhouse. Thrilled to seal the deal with Edibon, securing a massive investment of… pic.twitter.com/T5bVAuZbI0
— M.K.Stalin (@mkstalin) February 5, 2024
- ஸ்பெயின் நாட்டிற்கு முதல்முறை வந்துள்ளேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வு.
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, 'ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்' எனும் நிகழ்ச்சி நேற்றிரவு அங்கு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அயல்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும்- உதவி புரிய வேண்டும்- அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள்- ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கலைஞர் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம். தயாராக இருக்கிறோம்.
அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி. இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினை களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்.
உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட் டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம்.
அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கு மட்டுமல்ல. இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டி ருக்கும் உங்க ளுக்கும் அது பெருமைதான்.
பல்வேறு வெளிநாடு களுக்குச் சென்று இருந்தா லும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ள படியே மகிழ்ச்சி அடைகி றேன். பெருமைப் படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்-அமைச்சரின் செயலாளர் டாக்டர் உமாநாத் ஸ்பெ யின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
- ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.
சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குனர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார்.
இதன் காரணமாக 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
இதேபோல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது தவிர மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.
ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார். தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலவரம் பற்றி கேட்டறிந்து வருவதால் காணொலியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை திரும்புகிறார்.
7-ந்தேதி காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்க முடிவு செய்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்