search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெக்ஸ்கார்-19"

    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • `கார்-டி’ புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும்.

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வேதனையை அனுபவிப்பது ஒருபுறமிருக்க, அதன் சிகிச்சை முறைகளும் மிகவும் வலி நிறைந்தவை. அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த முறையின் பெயர் கார்-டி (சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி டி-செல்) செல் சிகிச்சை. இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.

     லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும். இந்தியாவில் கார்-டி சிகிச்சைக்கு மத்திய மருந்து நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது.

    கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு குணமாகாத புற்று நோயாளிகளுக்கு கார்-டி (CAR-T) செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இது குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் புதிய நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்து போராட, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கிறது.

    கார்-டி சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை தாக்குவதற்கு நோயாளியின் டி-செல்களை பயன்படுத்துவதாகும். டி-செல்கள் என்பது ஒரு வகை ரத்த வெள்ளை அணுக்களாகும். இவை உடலில் தொற்றுநோய் ஏற்படும்போது அதை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்காக டி-செல்கள் நோயாளியின் ரத்தத்தில் (ரத்த வெள்ளை அணுக்கள்) இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் மரபணு மாற்றம்

    செய்யப்படுகின்றன. இந்த மரபணு மாற்றப்பட்ட செல்கள் மீண்டும் நோயாளிக்குள் செலுத்தப்பட்டு, அவை புற்றுநோய் செல்களைத் தாக்கி கொல்லும்.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார்-டி சிகிச்சையின் பெயர் நெக்ஸ்கார்-19. இது இந்தியாவில் இன்மியூனோ ஆக்ட் என்ற நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சம். லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிகிச்சையை வெளிநாட்டில் செய்தால் ரூ. 4 கோடி வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் சுமார் ரூ.40 லட்சத்தில் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது அளிக்கப்படுகிறது. பி-செல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். குறிப்பாக லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற ரத்த புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளது.

    புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிலரது உடலில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் பலருக்கு ரத்தத்தில் புற்று நோய் செல்கள் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சை பயனுள்ளாதாய் இருந்தாலும், கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.

    ஆனால் கார்-டி செல் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    2017-ம் ஆண்டில், அமெரிக்கா கார்-டி சிகிச்சையை முதன் முதலில் அங்கீகரித்தது. ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல வளர்ந்த நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. முதலில் இந்தியா இந்த சிகிச்சை முறையை வெளிநாடுகளில் இருந்து தான் பெற வேண்டி இருந்தது.

    இங்குள்ள நோயாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும்போது மருத்துவமனை கட்டணம், மருத்துவர், உணவு மற்றும் பிற செலவுகளை ஒப்பிடும்போது விலை அதிகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் விளைவாக, விலை குறையும் என்பதால் பலராலும் இந்த சிகிச்சையை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கார்-டி செல் சிகிச்சை மூலம் முதல் நோயாளியாக, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரது பெயர் வி.கே. குப்தா. டெல்லியை சேர்ந்த இவர் இரைப்பை குடல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்-டி செல் சிகிச்சையை பயன்படுத்தி மருத்துவர் ஒருவரே புற்றுநோயில் இருந்து குணமாகி இருப்பதால் இந்த சிகிச்சை புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சிகிச்சை முறை உடலில் ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது. எந்தவொரு சிகிச்சை முறையிலும் முன்னேற்றம் அடையாத ரத்த புற்றுநோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயனுள்ளதாகவே இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.

    ×