search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு கட்டுப்பாடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தோற்றத்தில் பிரகாசிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்
    • தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டாலே பெண்கள் முகத்தில் ஒருவித பூரிப்பு குடிகொள்ளும். 'கல்யாணக் களை' வந்துவிட்டதாக சொல்வார்கள். அந்த பூரிப்பை மணமேடை வரை தக்கவைத்து பொலிவுடன் ஜொலிக்கவும், கட்டுடல் தோற்றத்தில் பிரகாசிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    நீரேற்றம்

    திருமண நாள் நெருங்கும்போது உற்சாகம் பெருகும். அது முகத்தில் பிரகாசிக்கவும், சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கவும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது அவசியமானது. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதற்கு வழிவகுக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். செரிமானத்துக்கும் உதவும். உடல் இலகுவாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

    உணவுக் கட்டுப்பாடு

    உணவோ, உணவு பதார்த்தங்களோ, நொறுக்குத்தீனிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பெரிய தட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்தலாம். அது இயல்பாகவே அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க உதவும். திருமணத்திற்கு தயாராவதற்குரிய இலக்குகளை நோக்கி பயணிக்க உதவிடும்.

    பாதாம்

    தினசரி உணவில் பாதாம் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட 15 அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. முக்கியமாக பாதாம் பருப்பில் காணப்படும் கொழுப்புகள், வைட்டமின் ஈ ஆகியவை சரும நலனை மேம்படுத்தும். இளமையாகவும், துடிப்பாகவும் தோற்றமளிக்க செய்யும். வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர செய்து அதிகம் சாப்பிட அனுமதிக்காது. உடல் எடையை சீராக பராமரிப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும்.

    தூக்கம்

    உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்க தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான நேரம் தூங்குவது பசிக்கு காரணமான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும். உணவை அதிகம் உண்பதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும். மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும்.

    மன அழுத்தம்

    திருமண ஏற்பாடுகளில் முழுக் கவனம் செலுத்துவதும், திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதனை கட்டுப்படுத்த தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். அவை ஆரோக்கியத்தையும், தோற்றப் பொலிவையும் பராமரிக்க உதவும். மனம் அமைதியாகவும், சருமம் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்யும்.

    பொறுமை

    உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இலக்குகளை அடைவதற்கு நிதானமும், பொறுமையும் தேவை. மனதை அலைபாயவிடாமல், தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும். இத்தகைய வழி முறைகளை முறையாக கடைப்பிடிப்பது திருமண நாளில் உங்கள் தோற்றத்தை பிரகாசிக்க வைக்கும்.

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சியில் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை இணைத்துக்கொள்வது தசையை வலுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஒட்டுமொத்த உடல் வலிமையையும் அதிகரிக்கச் செய்யும். உடல் தோரணையையும் மேம்படுத்தும்.

    சர்க்கரை உணவுகள்

    சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். அது எடை அதிகரிப்பு மற்றும் சரும பிரச்சினைகளை தடுக்க உதவும்.

    • இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட `என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், `லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

    இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, `பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது.

    இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×