என் மலர்
நீங்கள் தேடியது "முலுண்ட் எஸ்பிஐ கிளை"
- மனோஜ் விடுமுறையில் சென்றதால், அமித் குமார் லாக்கர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார்
- மஸ்கே திருடிய பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என தெரிந்தது
மும்பை நகரின் முலுண்ட் (Mulund) பகுதியில் உள்ளது, பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India). தங்க நகைக்கடன் சேவைக்கான பிரத்யேக கிளையாக முலுண்ட் எஸ்பிஐ (SBI) செயல்பட்டு வந்தது.
இந்த வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தவர் அமித் குமார் (Amit Kumar).
கடந்த மாதம் பிப்ரவரி 27 அன்று, அவருடன் பணிபுரிந்து வந்த 33-வயதான மனோஜ் மாருதி மஸ்கே (Manoj Maruti Mhaske) என்பவர் விடுமுறையில் சென்றிருந்ததால், அமித் குமாரிடம் லாக்கர்களை பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
தனது அன்றாட பணிகளில் ஒன்றான, தினசரி லாக்கர் பொருட்கள் கணக்கெடுப்பு பணியின் போது அமித் குமார் லாக்கர்களில் இருந்த தங்க நகை பாக்கெட்டுகள் குறைவதை கண்டார்.

பிப்ரவரி 26 வரை 63 தங்க நகை கடன்கள் வழங்கப்பட்டதால், 63 பாக்கெட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு பதில், 4 மட்டுமே இருந்தன.
மீதம் 59 பாக்கெட்டுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அமித், மஸ்கேவை தொடர்பு கண்டு இது குறித்து கேட்டார்.
தங்க நகை பொட்டலங்களை தான் எடுத்து வேறொரு இடத்தில் வைத்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் திரும்ப ஒப்படைப்பதாகவும் மஸ்கே தெரிவித்தார்.
இதையடுத்து, அமித் குமார் தனது மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார்.
மஸ்கே திருடிய தங்க நகை பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு, சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
இதையடுத்து, மஸ்கே வங்கி கிளைக்கு வரவழைக்கப்பட்டார்.
தான் திருடியதை ஒப்புக் கொண்ட மஸ்கே, சில நாட்களில் அனைத்து நகைகளையும் தந்து விடுவதாக மேலதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் பாண்டுப் (Bhandup) காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர்.
மஸ்கே மீது இ.பி.கோ. (Indian Penal Code) சட்டத்தின் 409-வது பிரிவின் கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மஸ்கேவிடம் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.