என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் சுரங்க பாதை"
- கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
- ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது.
சென்னை:
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 65 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் மீத முள்ளவை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.
திருமயிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணி தொடங்கியது.
பிளமிங்கோ என்ற சுரங்கம் தோண்டும் எந்திரமும் ஈகிள் என்ற 2-வது எந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த இரண்டு எந்திரங்க ளும் மெரினா கடற்கரை காந்திசிலை அருகே உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, திருமயிலை மெட்ரோ வரை கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கலங்கரை விளக்கத்தை வந்தடையும். வருகிற 20-ந் தேதி பிளமிங்கோ எந்திரமும், ஏப்ரல் 20-ந் தேதி ஈகிள் இரண்டாவது எந்திரமும் அதே இடத்தை அடையும்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளமிங்கோ எந்திரம் 134 மீட்டர் நீள சுரங்கப்பாதையை முடித்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவர் சிலைக்கு அருகில் உள்ளது.
அதே நேரத்தில் ஈகிள் எந்திரம் 71 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துள்ளது. 19-ந் தேதி முக்கியமான பணிகள் தொடங்கப்படும்.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
திருமயிலையில் சில கடைகளை அகற்றுவதில் சிரமமாக உள்ளது. அதனால் தண்டவாளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்றார்.
இது பற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், திருமயிலை மெட்ரோ 3 மற்றும் 4 வழித்தடங்களின் பரிமாற்றமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சில ரெயில் நிலையங்கள் 2028-ம் ஆண்டில் கடைசி இரண்டு நிலையங்களாக திறக்கப்படும்.
ஏனென்றால் இந்த ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது. ஆனாலும் நடைபாதை 4-ல் தொடரும் கலங்கரை விளக்க மெட்ரோ, திருமயிலை மெட்ரோ இயக்கப்படுவதற்கு முன்பு திறக்கப்படும்.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் தயாரானாலும் போரூர், பூந்தமல்லி வரை வசிக்கும் மக்கள் எளிதாக மெட்ரோ ரெயிலில் மெரினா கடற்கரையை அடையலாம் என்றார்.