search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் முதல் மந்திரி"

    • கேரளாவில் கருணாகரன் நினைவிடம் கட்டுவதை காங்கிரஸ் தாமதப்படுத்துவதாக பத்மஜா கருதினார்.
    • இதனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்துவந்தார்.

    புதுடெல்லி:

    கேரள முன்னாள் முதல் மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான இவர், கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

    கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தியின் வாகனத்தில் பத்மஜா ஏற முயன்றபோது, கட்சியின் உள்ளூர் தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதில் இருந்து பத்மஜாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என பத்மஜா எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதற்கிடையில், கேரளாவில் கருணாகரனின் நினைவிடம் கட்டுவதை காங்கிரஸ் தாமதப்படுத்துவதாகவும் பத்மஜா கருதினார். இதனால் கட்சி மீது அதிருப்தியில் இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 நாளாக டெல்லியில் முகாமிட்டிருந்த பத்மஜா, நேற்று பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பத்மஜாவின் சகோதரரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கே.முரளிதரனிடம் கேட்டபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகுவதாக கிடைத்த தகவலுக்கு பிறகு பத்மஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே, பா.ஜ.க.வில் தான் இணைவதாக வெளியான செய்திகள் போலியானவை. தான் நகைச்சுவையாக பேசியதாக தனது முகநூலில் பத்மஜா கருத்து வெளியிட்டார். சிறிது நேரத்தில் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். எனவே அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தில் பத்மஜா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பத்மஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அம்மாநில காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    ×