search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பின் நன்மைகள்"

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

    `கருணையின் வாசல் திறக்கப்படும் புனித ரமலான்'

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) புனித ரமலானில் கருணையின் வாசல் திறக்கப்பட்டதன் பின்னணியில் தான் மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வணக்க வழிபாடுகளில் ஈடுபட வழி பிறக்கின்றன. பாவங்களில் இருந்து விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கின்றன.

    அன்பு மலர்கின்றன, அமைதி நிலவுகின்றன, சாந்தி பரவுகின்றன, சமாதானம் பிறக்கின்றன, சகோதரத்துவம் வளர்கின்றன. ஈவு, இரக்கம், ஈகை ஆகிய பண்புகள் பரிணமிக்கின்றன. இறைவனின் அன்பு, அவனின் தரிசனம், சொர்க்கம் இவையாவும் ஒருவரின் வணக்கத்தினால் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. இதற்கும் மேலாக இறைவனின் கருணை அவசியம் தேவைப்படுகிறது.

    நபி (ஸல்) அவர்கள், 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது, (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)' என்று கூறினார்கள்.

    மக்கள், 'தங்களையுமா? (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லையா) இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்), என்னையும் தான்; அல்லாஹ் தனது கருணையாலும், அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி)

    ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 'நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! எனக்கு கருணை புரிவாயாக, மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.' (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல் லாஹ் கருணையை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்குகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டான் (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'அல்லாஹ் அன்பையும், கருணையையும் படைத்தபோது, அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் 99 வகைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான் (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    'ஆனால் எனது கருணை எல்லாப் பொருட்களின் மீதும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனை பயபக்தியுடன் பேணி நடப்போருக்கும், (முறையாக) ஜகாத் கொடுப்போருக்கும், நமது வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள்செய்வேன்' (திருக்குர்ஆன் 7:156)

    இறைவனின் கருணை கிடைத்திட மேற்கூறப்பட்ட நற்செயல்களையும் சேர்த்து, புனித ரமலானில் நோன்பு நோற்றால் இறைவனின் கருணை கிடைக்கும். இறைவனின் கருணைப்பார்வை நம் மீது விழும் போது பாவ மன்னிப்பும், சொர்க்கமும் உறுதியாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
    • சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.

    நோன்பின் மாண்பு ரமலான் மாதம் அரபி மாதங்களில் ஒன்பதாவது வரிசையில் இடம்பெற்ற ஓர் ஒப்பற்ற மாதமாகும். ரமலான் என்பதன் பொருள் 'கரித்தல்' என்பதாகும். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஸ்லிம்கள் மீது ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது. "எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற் கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பு இருக்கிறாரோ, அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    "இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பரிசுத்த மானவர்களாக ஆகக்கூடும்". (திருக்குர்ஆன் 2:183)

    நோன்பு யாருக்கு கடமை?

    1) முஸ்லிமாக இருக்க வேண்டும்

    2) பருவ வயதை அடைந்திருக்க வேண்டும்

    3) புத்தி சுவாதீனமுள்ளவராக இருக்க வேண்டும்

    4) சுகமுள்ளவராக இருக்க வேண்டும்.

    5) ஊரில் தங்கி இருக்க வேண்டும்

    இந்த ஐந்து அடிப்படைகளின் மீது இருப்பவர்கள், புனித ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த ஐந்து அடிப்படைகளில் ஒன்றை இழந்திருந்தாலும் அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகாது. நோன்பு இரு வகைப்படும். அவை: கடமையான நோன்பு, உபரியான நோன்பு.

    கடமையான நோன்புகள் மூன்று பிரிவுகளாகப் பிரிகிறது. ரமலான் மாத நோன்பு, குற்றப்பரிகார நோன்பு, நேர்ச்சை நோன்பு, இம்மூன்று நோன்புகளையும் நோற்பது கடமையாகும்.

    உபரியான நபி வழி நோன்புகள் எட்டு வகைகளாக பிரிகிறது. அவை: வாரத்தில் திங்கள், மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, மாதத்தில் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களின் நோன்பு, முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களின் நோன்பு, துல்ஹஜ் மாதத்தின் 1 முதல் 9 நாட்களின் வரையுள்ள நோன்பு, ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோற்கப்படும் நோன்பு, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சங்கையான மாதங்களில் வைக்கப்படும் நோன்பு, ஒருநாள் நோன்பு மறுநாள் ஓய்வு ஆகிய எட்டு வகையான நோன்புகள் உபரியான நபிவழி நோன்புகளாகும்.

    கடமையான ரமலான் மாத நோன்புகளை நோற்பதற்கு, மேற்கூறப்பட்ட எட்டு வகையான நோன்புகளும் பயிற்சிக்களமாக அமைகிறது. இதனால் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க உடல் வலிமையையும், மன வலிமையையும் முஸ்லிம்கள் பெற்று சர்வ சாதாரணமாக நோன்பிருக்கிறார்கள்.

    `இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலில் இருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்" (திருக்குர் ஆன் 2:187)

    இஸ்லாம் மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை குர்ஆனும், ஹதீஸூம் உணர்த்துகின்றன. நோன்பு வைத்திருக்கும் பகல் வேளையில் மட்டுமே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் கூடாதே தவிர இரவு நேரங்களில் அல்ல. பகல் இறைவனுக்கு, இரவு நமக்கே. இறைவனுக்காக இருக்கும் உண்ணாவிரதம், மனித உணர்ச்சிக்கு ஒருபோதும் தடையில்லை. சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.

    ×