என் மலர்
நீங்கள் தேடியது "டி கே சிவக்குமார்"
- காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
- பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.
பெங்களூரு:
பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.
அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.