search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கமே ஆரோக்கியத்துக்கு அடிப்படை"

    • வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில்தான் கழிகிறது.
    • இரவுநேர தூக்கத்தைவிட சிறந்த வரம் வேறு இருக்க முடியாது.

    நம் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில்தான் கழிகிறது. நமது தூக்கத்தின் தரத்தைப் பொறுத்தே, மீதமிருக்கும் வாழ்க்கையின் தரம் அமைகிறது. நல்ல இரவு நேரத் தூக்கத்தைவிடச் சிறந்த வரம் வேறு இருக்க முடியாது. தூக்கம் நமக்கு அளிக்கும் நன்மைகள் அப்படி. தூக்கம் நம் உடலுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் மனத்துக்கும் ஓய்வை அளிக்கிறது. மறுநாளைப் புத்துணர்வோடு எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றலையும் தருகிறது. சொல்லப்போனால், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் இரவுத் தூக்கமே அடிப்படை.

    நமது வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிக தூக்கம் தேவை. குழந்தையாக இருக்கும்போது நீண்ட நேரத் தூக்கம் தேவை. குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரமும் குறைகிறது. ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஏழு முதல் எட்டரை மணிநேரத் தூக்கம் தேவைப்படும். சராசரியாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேவைப்படும் தூக்கத்தின் அளவு:

    0 - 3 மாதங்கள் 14 -17 மணிநேரம்

    4 - 12 மாதங்கள் 12-16 மணிநேரம்

    1 - 2 வயது 11-14 மணிநேரம்

    3 - 5 வயது 10-13 மணிநேரம்

    6 - 12 வயது 9-12 மணிநேரம்

    13- 18 வயது 8-10 மணிநேரம்

    19 - 64 வயது 7- 9 மணிநேரம்

    65 வயதுக்கு மேல் 7-8 மணிநேரம்

    புத்துணர்வையும் ஓய்வையும் உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் 4 முதல் 6 தூக்க சுழற்சிகள் நமக்குத் தேவை. இதில் 4 நிலைகள் உள்ளன. முதல் 3 நிலைகளில் விரைவற்ற கண் அசைவு தூக்கமும், 4-ம் நிலையில் விரைவான கண் அசைவு தூக்கமும் இருக்கின்றன.

    நாம் தூங்கும் அளவைப் பொறுத்து ஒவ்வொரு நிலையிலும் தூங்கும் நேரம் மாறுபடும். பொதுவாக, முதல் நிலை 5 முதல் 10 நிமிடங்களும், 2-ம் நிலையில் 25 நிமிடங்களும், 3-ம் நிலையில் 20 முதல் 40 நிமிடங்களும், 4-ம் நிலையில் 10 நிமிடங்களும் நீடிக்கும்.

     முதல் நிலையில் நாம் தூக்கத்தை உணரமாட்டோம். ஆனால் உடல், மூளையின் செயல்பாடுகள் குறையும். 2-ம் நிலையில் இது நம்மை ஆழ்ந்த தூக்கத்துக்குத் தயார்படுத்தும். இந்நிலையில் தசைகள் தளர்வடையும். உடல் வெப்பநிலை குறையும். இதயத் துடிப்பும் சுவாசமும் குறையத் தொடங்கும். 3-ம் நிலையில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.

    இந்த கட்டத்தில் நம்மை எழுப்புவது மிகவும் கடினம். நாம் ஒருவேளை விழிக்க நேர்ந்தால், என்ன நடக்கிறது என்று தெரியாத ஒருவிதக் குழப்ப நிலையில் இருக்க நேரிடும். 4-ம் நிலை என்பது நாம் கனவு காணும் நிலை. இந்தநிலையில் மூளையின் செயல்பாடுகள் பெருமளவில் அதிகரிக்கும். கண்கள் வேகமாக நகரும். சுவாசம் வேகமடையும். இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

    வெந்நீர் குளியல், புத்தகம் வாசிப்பு, ஓய்வெடுத்தல், தூங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்துதல், விளக்குகளை அனைத்து அறையை இருட்டாக்குதல். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் விழித்துப் பழகுதல் போன்றவை நமது தூக்கத்துக்கு உதவுபவை.

    ×