search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண் தாமரை இதழ் டீ"

    • டீ, காபி இவை பழங்கால தமிழர் கலாசாரத்தில் இல்லை.
    • அடிக்கடி டீ, காபி குடிப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல.

    பரபரப்பான, தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்துள்ள வாழ்க்கையை இன்றைய மனித சமுதாயம் அனுபவித்து வருகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யக்கூடிய `மல்டி டாஸ்கிங்' என்ற வளையத்துக்குள் இன்றைய இளைய சமுதாயம் சிக்கிக்கொண்டுள்ளது. எதிலும் வேகம், அதிரடியான செயல்பாடுகள் போன்றவை தான் முன்னேற்றமான வாழ்க்கையை தரும் என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் தீவிரமாக காணப்படுகிறது.

    இந்த ஓட்டத்திற்கு தங்களை தயார்படுத்த பல்வேறு சத்து பானங்கள், புத்துணர்ச்சி தரும் பானங்கள் போன்றவற்றை உணவு இடைவேளைகளுக்கு இடையில் பருகும் வழக்கம் பலரிடம் உள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் இதுபோன்ற புத்துணர்ச்சி தரும் பானங்கள் செயற்கையானவை. ரசாயனம் மற்றும் செயற்கை இனிப்புகள் மூலம் தயாரிக்கப்படுபவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் வயிற்றுக்கோளாறு தொடங்கி பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

    நவீனத்தில் வாழ்ந்தாலும் இயற்கையை நோக்கி திரும்புவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் என்ற எண்ணமும் உலக அளவில் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. இதில் சீன மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கையாளுவதில் முன்னிலை வகிக்கின்றனர்.

    நமது நாட்டிலும் இயற்கைக்கு வழிகாட்டும் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இயற்கையாக வீட்டில் உள்ள சமையல் அறை பொருட்களை பயன்படுத்தி புத்துணர்ச்சி தரும் பானங்களை எப்படி தயாரிக்கலாம் என்பதை காண்போம்.

    தினமும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிக்கம் பழக்கம் பலரிடம் உள்ளது. அன்றைய தமிழர்கள் அதிகாலையில் எழுந்து வேப்பங்குச்சி வைத்து பல் துலக்கிவிட்டு, நீராகாரம் குடித்து விட்டு தங்கள் வேலையை தொடங்கினார்கள். கடுமையான வயல் வேலைகளை அவர்கள் எளிதாக செய்தார்கள். டீ, காபி இவை பழங்கால தமிழர் கலாசாரத்தில் இல்லை. தேயிலை சீனர்களின் பானம்.

    காபி அரேபியர்களின் பானம். இவை காலப்போக்கில் தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது. அடிக்கடி டீ, காபி குடிப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல. நம்முடைய முன்னோர்கள் டீ, காபிக்கு பதிலாக ஏராளமான பானங்களை புத்துணர்ச்சிக்காகவும், உடல் நலனுக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவை இயற்கையானது. நமது வீட்டின் சமையல் அறையில் உள்ள பொருட்களில் எளிதாக தயாரிக்கக்கூடியது.

    நமது தாத்தா-பாட்டிகள் காலத்தில் இந்த பானங்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இவை உடலுக்கு ஆரோக்கியமும், புத்துணர்வும் தரக்கூடியவை. உடலுக்கு எந்த பாதிப்பையும் தராதவை.

    காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் நாம் பல்வேறு வகையான பானங்களுக்கு அடிமையாகி விட்டோம். அவை பெரும்பாலும், அதிக செயற்கை இனிப்புகள், செயற்கை ரசாயன சேர்மங்கள். உணர்வுகளை செயற்கையாக தூண்டும் சேர்மானங்கள் நிறைந்தவை. இவை அந்த நேரத்தில் உற்சாகம் தந்தாலும் காலப்போக்கில் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை தரக்கூடியவை.

    செயற்கைக்கு `குட்பை' சொல்லிவிட்டு இயற்கைக்கு திரும்பும் காலம் வந்துவிட்டது. இயற்கையான பொருட்கள் மூலம் உற்சாகமும், ஆரோக்கியமும் தரும் பானங்கள் பற்றி பார்ப்போம்.

     சுக்கு மல்லி காபி

    சுக்கு, மல்லி விதை, மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து, இவைகளை நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது 200 மில்லி தண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து நன்றாக காய்ச்சி குடிக்கலாம். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும், செரியாமை நீங்கி நோய் எதிர்ப்புச் சக்தி தரும்.

     செம்பருத்தி டீ

    செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து சுவைக்கலாம். இது இதய நோயைத் தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும், இதயப் படபடப்பு வலி குறையும்.

     ஆவாரம் பூ தேநீர்

    காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

     மாம்பூ பானம்

    மாம்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகி வர சீதபேதி குணமாகும். வயிற்றுக்கு நன்மை தரும். தேன் சேர்க்காமல் குடித்தால் இதிலுள்ள துவர்ப்பு சுவை நீரிழிவை சிறிது கட்டுப்படுத்தும்.

     துளசி இலை பானம்

    சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து, தேன் சேர்த்தால் துளசி இலை பானம் ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியம் தரும். நெஞ்சுச் சளி, கபம் போக்கும். கொத்தமல்லி தழை பானம் கொத்தமல்லித் தழையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள், வெல்லம், எலுமிச்சை பழச்சாறு கலந்து பருகவேண்டும். சுவையான இந்த கொத்தமல்லி டீ பித்தம் தொடர்பான நோயைப் போக்கும்.

     புதினா இலை பானம்

    புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும், வயிற்றுப்போக்கை நிறுத்தும். சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய் ஒழுங்காகும், வயிற்றில் தங்கும் வாயுவை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். ரத்தக் குழாய்கள் பலமடையும்.

     கொய்யா இலை பானம்

    கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும்.

     வேப்பம் பூ பானம்

    கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்ப மலர்களை நீரில் காய்ச்சி குடித்து வர குடல் கிருமி நீங்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், நீரிழிவு கட்டுப்படும்.

    நத்தைச்சூரி விதை பானம்

    சிறிதளவு நத்தைச்சூரி விதையை வறுத்து பொடி செய்து, காய்ச்சி குடித்து வந்தால் உடல் பருமன் நீங்கும், இதைக் காபிக்கு பதிலாக குடித்து வரலாம்.

     கருவேப்பிலை, முருங்கை இலை பானம்

    கருவேப்பிலை, முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக பொடி செய்து வைக்கவும், இதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வர நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்தம் அதிகரிக்கும், உடல் சோர்வு நீங்கும்.

     சங்குப்பூ தேநீர்

    சங்கு புஷ்ப மலர்களை காக்கட்டான் என்றும் சொல்வார்கள். இதனுடன் ஏலக்காய், தேன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மனதிற்கு நல்லது. நல்ல ஞாபக சக்தி உண்டாகும். செரிமான சக்தியை அதிகரிக்கும், குடலுக்கு நன்மை தரும்.

    வெண் தாமரை மலர் பானம்

    வெண் தாமரை மலர் இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும். வெண் தாமரை மலருடன், ரோஜா இதழ்கள், சிறிது லவங்கப்பட்டை சேர்த்து தண்ணீரில் காய்ச்சி, சுவைக்காக தேன் கலந்து குடித்தால் இதயத்திற்கு நல்லது.

     குங்குமப்பூ பானம்

    வெந்நீரில் சிறிதளவு குங்குமப்பூ போட்டவுடன் அழகிய செஞ்சிவப்பு நிறமாகி விடும். இதை தொடர்ந்து பருகி வர மனதிற்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரும்.

    ×