என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுகாதி பண்டிகை"

    • புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்- இ.பி.எஸ் யுகாதி வாழ்த்து.
    • தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
    • பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.

    பெங்களூரு:

    தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.

    சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.

    பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். 

    • தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.
    • தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் யுகாதி திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. யுகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டாலும் 2006-ம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆவார்.

    தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், பாராளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

    இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது யுகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

    அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யுகாதி பண்டிகையான நேற்று முதியவருக்கு அசத்தலான விருந்து வைக்க அவருடைய பேரன் பேத்திகள் முடிவு செய்தனர்.
    • சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த முதியவர் அவருடைய பேரன் பேத்திகளை மனமார வாழ்த்தினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொண்ட பாகுபலி விருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் முதியவர் ஒருவருக்கு இதே போன்ற ஒரு விருந்தை வைத்து அவருடைய பேரன்கள் அசத்தியுள்ளனர். ஏலூர் மாவட்டம் பட்டயக்குடம் அருகே உள்ள மர்லகுடெம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாக சூர்யா.

    இவர் முதல் முறையாக அவருடைய பேரன்கள் வீட்டிற்கு சென்றார். யுகாதி பண்டிகையான நேற்று முதியவருக்கு அசத்தலான விருந்து வைக்க அவருடைய பேரன் பேத்திகள் முடிவு செய்தனர். 108 வகையான உணவுகளை தயார் செய்தனர்.

    ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பல்வேறு வகையான உணவு வகைகள், மீகடா, மோர், ஹாட்ஸ் கேக், பழ வகைகள், உலர் பழங்கள், பிஸ்கட், சாக்லேட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை, பூரி உள்ளிட்ட 108 வகையான பிரம்மாண்ட பாகுபலி உணவுகளை பரிமாறினர்.

    இதனை ருசி பார்த்த முதியவர் மகிழ்ச்சியடைந்தார். விருந்து முடிந்ததும் முதியவரிடம் அவருடைய பேரன் பேத்திகள் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

    சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த முதியவர் அவருடைய பேரன் பேத்திகளை மனமார வாழ்த்தினார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    ×