search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி தண்டாயுதபாணி கோவில்"

    • ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    சோபகிருது முடிந்து இன்று குரோதி வருடம் பிறந்ததைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    குரோதி வருட தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆன போதிலும் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.

    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நாணயங்களையும், பிரசாதங்களையும் பெற்றுச் சென்றனர்.

    ×