search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுமலை புலிகள் சரணாலயம்"

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
    • தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம்.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை அனல் வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசன் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்திருந்து அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் மலர்ச்செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு இரண்டரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும் பணி முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தையும் காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி அங்கும் குவிந்து வருகிறார்கள். கட்டணம் செலுத்தும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பு நிறைந்த தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வர். அந்த வாகனம் வனப்பகுதியை சுற்றி வரும். அப்போது யானை, மான், புலி என ஏராளமான வனவிலங்குகள் காட்டில் சுற்றித்திரிவதை நேரில் பார்க்கலாம்.

    அதேபோல தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் சென்று சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறும். இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முதுமலை முகாம் மற்றும் தெப்பக்காடு முகாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    ×