search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலச்சீட்டு மோசடி"

    • பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
    • கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.

    மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.

    இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

    எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.

    ×