search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோங்கீ வாழைப்பழம்"

    • மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது.
    • உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்குகிறார்கள்.

    ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 'மோங்கீ' என்ற அந்த வாழைப்பழம், மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது என்பதுடன், இதன் தோலையும் சாப்பிட முடியும்.

    சாதாரண வாழைப்பழங்களில் தோலில் கசப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் மோங்கீ வாழைப்பழத்தின் தோல் மிக மெல்லியதாகவும் மிகக் குறைவான கசப்புடனும் காணப்படுகிறது.

    இந்த வாழையை `உறைய வைத்து வளர்த்தல்' என்ற முறையில் உருவாக்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றிய முறை இது.

    பனி யுகம் முடிந்த பிறகு, தாவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர ஆரம்பித்தன. அந்த காலத்தில் தோன்றிய தாவரங்களின் டி.என்.ஏ.வை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் தாவரங்களை உருவாக்கினார்கள். அதில் ஒன்று மோங்கீ வாழை.

    அந்த காலத்தில் இந்த வாழை வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின. ஆனால் இன்றோ 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோங்கீ வாழைப்பழம் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.

    ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இதை வாங்கி, சுவைக்க முடிந்தது. காரணம் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க முடியவில்லை. இதன் உற்பத்தி மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு வாரத்திற்கு டி-டி என்ற பண்ணை 10 வாழைப்பழங்களை மட்டுமே விளைவிக்கிறது. ஒரு பழத்தின் விலை சுமார் 362 ரூபாய்.

    `மற்ற வாழைப்பழங்களை விட மோங்கீ மிகவும் சுவையானது. அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டுகிறது. மோங்கீ வாழைப்பழத்தின் தோல் பகுதி மெல்லியதாக இருப்பதால் பழத்துடன் சேர்த்து எளிதாக மென்று விழுங்கிவிட முடிகிறது. தோலின் சுவை கூட நன்றாக இருக்கிறது.

    வைட்டமின் பி-6, மக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. மிக முக்கியமாக செரடோனின் இருக்கிறது. இது உடல் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தோன்றும் உணர்வுகளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால் ஆரோக்கியம் கருதி, தோலை அவசியம் சாப்பிட்டு விடலாம்'' என்கிறது பண்ணை நிர்வாகம்.

    ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கீ வாழை விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு இயற்கையான எதிரிகள் கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

    ×