search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வராசு எம்பி"

    • பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.
    • குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 67). திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு கமலவதனம் என்பவருடன் திருமணம் முடிந்து செல்வப்பிரியா, தர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இவர் தனது சிறுவயதில் இருந்தே கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கினார். மேலும், மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும், மாவட்ட, மாநில பொறுப்புகள், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், மாநிலக்குழு உறுப்பினர், தேசியக்குழு உறுப்பினர், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். இவர் திருவாரூர் மாவட்ட துணை செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் கடந்த 1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்முறையாக மக்களவைக்கு சென்றவர். அதனைத் தொடர்ந்து, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.

    இப்படி தனது தொகுதி மக்களுக்காக குறள் கொடுத்து போராடி வந்த இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சையும் பெற்றுள்ளார். அந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதி பிரச்சினைகளிலும் ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

    இந்நிலையில் செல்வராசு எம்.பி.க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் திடீரென காலமானார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

    இவரது இறுதிச்சடங்கு திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி கிராமத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    ×