search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரசிம்மர் ஜெயந்தி"

    • ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார்.
    • லட்சுமி நரசிம்மர் புன்னகையுடன் விளையாடினார்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார். எந்த காரியமாக இருந்தாலும் நரசிம்மரிடம் சம்மதம் (பூ போட்டு பார்த்தல்) கேட்டுவிட்டுத்தான் செய்வார். இவரிடம் லட்சுமி நரசிம்மர் கொஞ்சம் விளையாடி பார்த்தார்.

    அவரது பையனுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு பக்தர் இவரிடம் அறிமுகம் ஆனார். அவர் கல்லூரி அட்மிஷன் விசயத்தில் விவரம் தெரிந்தவர். ஆனாலும் பணத்தாசை. எனவே இந்த அட்மிஷனில் முதலாம் வருடம் இருந்து பெரிய தொகை பெற்றுக்கொண்டு அட்மிஷன் வாங்கித் தருவதாக வாக்களித்தார்.

    வழக்கப்படி பையனின் தந்தை லட்சுமி நரசிம்மரிடம் பூப்போட்டு பார்த்தார். மல்லிகை பூ வந்தால் சரி, அரளிப்பூ வந்தால் வேண்டாம் என்ற நியதியில். லட்சுமி நரசிம்மர் இங்கு தான் புன்னகையுடன் விளையாடினார். சரி என்று மல்லிகை பூவே வந்தது.

    தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பணத்தை கொடுத்துவிட்டு அட்மிஷனுக்காக காத்துக்கொண்டு இருந்தார். காலம் கடந்து ஏமாந்தது தெரியவந்தது. பெருமாளே விளையாடி விட்டானே என்று நொந்து கொண்டார். இருப்பினும் கோவிலுக்கு வருவதை நிறுத்தவில்லை.

    சுமார் ஒரு வாரம் கழித்து பணம் வாங்கிய பெரிய மனிதர் அடித்து கட்டிக்கொண்டு பெருமாள் காலடியில் விழுந்தார். அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அதில் ஒரு சிம்மம் அவரை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலை நோக்கி துரத்திக்கொண்டு வந்ததாம். மனிதர் அப்படியே அரண்டு போய் பணத்தை கொண்டுவந்து பணம் தந்தவரிடம் கொடுத்து சென்று விட்டார்.

    ஒரு கேள்வி அனைவரது மனதிலும் தோன்றும். பூ கட்டி பார்த்தபோது வேண்டாம் என்று பெருமாள் காண்பித்து இருக்கலாமே? ஆனால் அந்த பணம் பெற்று ஏமாற்ற நினைத்தவரை திருத்தி நல்வழிப்படுத்த முடியாதே? அதற்குதான் இந்த விளையாட்டு.

    • பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.
    • மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

    சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக்கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

    நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம் மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.

    நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம். அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும்.

    "யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து

    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்

    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே"

    பொருள்: பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே, தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே, நினைத்த மாத்திரத்தில் உங்களுடைய பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே, லட்சுமி நரசிம்மனே. இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம். 

    • பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கில் சாமி, மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று (22-ந் தேதி) நடை பெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் எழுந்தருளி னார். பின்னர் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாளை (23-ந் தேதி) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்தவர் நரசிம்மர்.
    • ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர்.

    அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது.

    ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். இவர் கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருந்த போது, மறுகரையில் இருந்த ஆதிசங்கரர் உடனடியாக வரும் படி அழைத்தார். குருவின் மீது கொண்ட பக்தியால் எதை பற்றியும் யோசிக்காமல் கரைபுரண்டு ஓடும் கங்கை நீரில் இறங்கி நடக்க துவங்கி விட்டார்.

    பிறகு தான் தெரிந்தது அவர் நீரின் மீது நடப்பதும், அதுவும் தாமரை மலர்கள் மீது கால் வைத்து நடந்து வந்ததும். குருவின் மீது இவர் கொண்ட பக்தியை பார்த்து நெகிழ்ந்து கங்கை தாயே தாமரை மலர்களை நீட்டி, அவரை தாங்கி பிடித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு பத்மபாதமர் என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆதிசங்கரரின் சீடனான பத்மபாதன், நரசிம்ம சுவாமியின் தீவிர பக்தன். அவருக்கு நரசிம்மரை நேரில் காண வேண்டும் என வெகு நாட்களாக ஆசை. இந்த ஆசை சில நாட்களில் வைராக்கியமாக மாறியது. இதனால் நரசிம்மரை நோக்கி கடும் தவம் புரிவதற்காக காட்டிற்கு சென்றார்.

    அடர்ந்த காட்டில் வெகு நாட்களாக கண்களை மூடி, நரசிம்மரை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேடன் ஒருவன், " யாரு சாமி நீ? பல நாட்களாக நான் உன்னை இங்கு பார்க்கிறேன். எதற்காக இங்கு வந்து கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறாய்?" என கேட்டான்.

    அவனுக்கு பதிலளித்த பத்மபாதன், "நான் நரசிம்மரை காண்பதற்காக தவம் செய்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே" என சொன்னார். " நரசிம்மமா? அப்படின்னா என்ன சாமி?" என அறியாமையுடன் கேட்டான் வேடன். "நரசிம்மம் என்றால் மனிதன் பாதி, மிருகம் பாதியான . அதை பற்றி சொன்னால் உனக்கு புரியாது" என சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் பத்மபாதன்.

    ஆனால் வேடனோ, நீ சொல்வது போன்ற ஒரு மிருகத்தை இதுவரை நான் இந்த காட்டில் பார்த்தது கிடையாது. என்னவோ உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. உனக்காக இன்று பொழுது சாய்வதற்குள் அந்த மிருகம் எங்கிருந்தாலும் பிடித்து, கட்டி இழுத்து வருகிறேன்" என சொல்லி விட்டு காட்டிற்குள் சென்றான் வேடன். மான், முயல் என எத்தனையோ கண்ணில் பட்டும் அவற்றை பொருட்படுத்தாமல், நரசிம்மத்தின் மீது அவனது சிந்தனை இருந்தது.

    பசி, தாகம் அத்தனையும் மறந்து காடு முழுவதும் தேடினான் கிடைக்கவில்லை. அந்தி சாயும் நேரமானது. தான் கொடுத்த வாக்குப்படி நரசிம்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என மனம் வருந்திய வேடன், இனியும் தான் உயிர் வாழ்வதில் அர்த்தம் கிடையாது என நினைத்தான்.

    கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் வாழ்வதை விட சாவது மேல் என நினைத்த வேடன், ஒரு பெரிய பாறையின் மீது ஏறி உயிரை விட தயாரானான். அவனது அர்ப்பணிப்பு, கடமை உணர்வு கண்டு உருகிப் போன ஸ்ரீமன் நாராயணன், நரசிம்மமாக வேடனுக்கு காட்சி கொடுத்தார்.

    தான் நாள் முழுவதும் தேடி அலைந்த நரசிம்மம் தன் முன் தோன்றியதை உண்டு உற்சாகமடைந்த வேடன், " மாட்டிக்கிட்டியா? உன்னை விடுவேனா பார்" என்று சொல்லி செடி, கொடிகளை வைத்து நரசிம்மரை கட்டி, பத்மபாதன் முன் அழைத்து வந்தான். பெரிய பெரிய வேதாந்திகளுக்கும், ரிஷிகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள், ஒரு வேடனின் அன்பிற்கு கட்டுப்பட்டு நின்றார்.

    "சாமி, இதோ நீ கேட்ட நரசிம்மம்" என காட்டினான். பத்மபாதனின் கண்களுக்கு நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நின்ற செடி, கொடிகள் மட்டுமே சுற்றிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

    இதனால், கோபமடைந்த பத்மபாதன், "அடேய் பைத்தியமே... என்னுடைய அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் செடி, கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாயே" என ஏளனமாக சிரித்தார். ஆனால் கட்டில் இருப்பது நரசிம்மம் என வேடன் என பலமுறை சொல்லியும் பத்மபாதன் கண்ணிற்கு தெரியவே இல்லை.

    அப்போது ஒரு அசரீரி கேட்டது. "பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தேடி அலைந்தான். என்னை காணாததால் உயிரை விடுவதற்கும் தயாரானான். ஆனால் நீயோ, அலைபாயும் மனதுடன், நான் வருவோனோ, மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவம் செய்தாய். உன்னிடம் ஆணவமும் உள்ளது. அப்படி இருக்கும் போது உன் கண்ணிற்கு நான் எப்படி தெரிவேன்?" என கூறி மறைந்து விட்டார் நரசிம்மர்.

    ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன் தனக்கு காட்சி அளிக்காமல் போனதற்கும், வேடனைப் போல் தனக்கு உறுதியான நம்பிக்கை இல்லாமல் போனதற்கும் வெட்கி தலைகுனிந்தார். வேடனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு, நம்பிக்கையும், முழு அர்ப்பணிப்புமே உண்மையான பக்தி என்பதை புரிந்து கொண்டார் பத்மபாதர்.

    • அவதாரங்களில் அற்புதமானது, அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான்.
    • பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.

    நரசிம்மர் என்றாலே உக்கிர வடிவம், நினைத்ததும் பயம் கொள்ள வைக்கும் தோற்றம் தான் நினைவிற்கு வரும். ஆனால் நரசிம்ம ரூபங்களில் அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சி கொள்ள செய்யும் தோற்றமான லட்சுமி நரசிம்ம ரூபத்தில் மட்டும், லட்சுமி தேவி, நரசிம்மரின் அருகில் கூட இல்லாமல் மடியில் அமர்ந்த நிலையில் மட்டுமே காட்சி தருவார். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதமானது மட்டுமல்ல அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான் என சொல்வார்கள். மற்ற பெருமாள் ரூபங்களில் இல்லாத மற்றொரு தனிச்சிறப்பு நரசிம்மருக்கு உண்டு. நரசிம்ம ரூபம் உக்கிரமானது என்றாலும், பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.

    நாளை என்ற சொல்லே அறியாத நரசிம்மர் என்பார்கள். தாயின் கருவில் உதித்து வந்தால் கூட தாமதமாகி விடும். தனது பக்தன் அதுவரை துன்பத்தை பொறுக்க வேண்டி இருக்குமே என நினைத்து, "தூணிலும் இருக்கிறாரா உனது ஸ்ரீஹரி?" என கேட்டு, அதை உடைக்க இரண்யன் தனது கதையை ஓங்கும் முன்பாக, அவன் வேண்டிய வரத்தின் படியே ஒரு அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிபட்டு வந்து, தனது பக்தன் பிரகலாதனை காத்தவர் நரசிம்ம மூர்த்தி.

    அதே போல் தனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் தர வேண்டும் என கேட்ட பிரகலாதனுக்கு, உன்னை போன்ற ஒரு அற்புதமான தெய்வ பக்தி உள்ள குழந்தையை அளித்ததற்காக உனது தந்தைக்கு மட்டுமல்ல உனக்கு முந்தைய தலைமுறைக்கும், உனக்கு பின்னால் வரும் தலைமுறைக்கும் சொர்க்கத்தில் இடம் அளித்து விட்டேன் என கேட்டதை விட பல மடங்கு அதிகமான வரத்தை கொடுத்து அருளியவர் நரசிம்மர்.

    பொதுவாக அனைத்து பெருமாள் ரூபங்களிலும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பிலேயே இடம்பிடித்திருப்பார். ஆனால் நரசிம்மர் கோலத்தில் மட்டும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பில் இடம் பெறாமல் மடியில் அமர்ந்திருப்பார். பெருமாள் அவளை ஆளிங்கனம் செய்த நிலையில், லேசான புன்னகையுடன், சாந்த சொரூபமாக காட்சி தருவார். இதனாலேயே நரசிம்ம ரூபங்களில், லட்சுமி நரசிம்மரை பலரும் விரும்பி வணங்குவர்.

    நரசிம்மர், இரண்யனை வதம் செய்த பிறகு உக்ரம் அடங்காமல் இருந்தார். தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் நரசிம்ம ரூபத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினர். இறுதியாக சிவபெருமானிடம் போய் அனைவரும் முறையிட்டனர். அவர் சர்வேஸ்வர ரூபம் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார்.

    ஆனால் அனைவரும் அஞ்சும் படியான ரூபத்தில் இருந்த நரசிம்மரின் மடியில் சென்று லட்சுமி தேவி அமர்ந்தாள். உடனடியாக நரசிம்மரின் உக்ர ரூபம் மாறி, அழகிய ரூபம் வந்தது. இத்தகைய அழகுடன் விளங்குவதால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

    நரசிம்மரின் மடியில் மட்டும் லட்சுமி அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பதற்கு காரணம் உண்டு. ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய திருமுகத்தை பார்த்து, ஆனந்தபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என மகாலட்சுமிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. திருமார்பில் இருந்தால் அவரின் முகத்தை பார்க்க முடியாது என்பதால் தான் மடியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் என்று சொல்கிறார்கள். 

    • பிரச்சினைகள் கதிரவனை கண்ட பனி போல விலகிவிடும்.
    • நரசிம்ம காயத்திரி மந்திரத்தை 12 முறை சொல்லலாம்.

    வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசி, சுவாதி நட்சத்திரம் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ வேளை என்பது சிவனுக்கு மட்டுமே உரியது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் இந்த வேளையில் சுவாமியின் அவதாரம் நிகழ்ந்ததால், அது நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.

    ஈசனுக்கு எப்படி சனிப்பிரதோஷம் மகிமை வாய்ந்ததோ, அதேபோல நரசிம்மருக்கும் செவ்வாய்க்கிழமை, சுவாதி நட்சத்திரத்தில் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விரதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்று ஐதீகம்.

    வழிபாடும் விரதமும்

    மேலும் நரசிம்மரின் அவதார திருநாளான நரசிம்மஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை, பில்லி சூனியம், கடன் தொல்லை, குடும்பத்தில் சச்சரவு, பணத்தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் கதிரவனை கண்ட பனி போல விலகிவிடும்.

    அதிலும் குறிப்பாக நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து நீராடி நாமம் தரித்துக் கொண்டு லட்சுமி நரசிம்மர் படத்தை செவ்வரளி மலர்கள், துளசியால் அலங்கரித்து பானகம் அல்லது சர்க்கரைப்பொங்கல் படைத்துவிட்டு, நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை நரசிம்மரே குரு, நரசிம்மரே இறைவன் அவரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறார் அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை நான் சரணடைகிறேன்-என்று 12 முறை சொல்லிவிட்டு சுவாமி முன்பாக விழுந்து வணங்கவேண்டும்.

    பின்னர் தெரிந்தவர்கள் நரசிம்ம காயத்திரியை 12 முறை சொல்லலாம். தொடர்ந்து தீபதூபங்கள் காட்டி விட்டு சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சாப்பிடலாம்.

    மேலும் விரதம் இருப்பவர்கள் பிரசாதம் உண்ணுவதற்கு முன்பாக சுவாமியின் உருவப்படத்தின் முன்பாக வந்து, இன்ன காரியத்துக்காக தொடர்ந்து குறிப்பிட்ட மாதம் சுவாதி நட்சத்திர நாளில், எல்லா நலன்களும் அருள்வாய் லட்சுமி நரசிம்மா என்று மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.

    அதுவும் குறிப்பாக இந்த பூஜையை பிரதோஷ நேரத்தில்தான் செய்து வரவேண்டும். மேலும் விரதம் இருப்பவர்கள் நாள்முழுவதும் திரவ உணவு மட்டுமே உட்கொள்வது நல்லது.

    சுவாமிக்கு 21 அல்லது 45 நாட்கள் விரதம் இருப்போர் அத்தனை நாட்களும் உபவாசம் இருக்கவேண்டுமென அவசியம் இல்லை. பிரதோஷ வேளையில் நரசிம்மரை 12 முறை வணங்கி எழுந்தபிறகு பானகம் நிவேதிக்கலாம். அசைவ உணவு, பழைய உணவு, கடை உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது, அவ்வளவுதான்.

    விரதம் முடியும் நாளன்று நரசிம்மர் சன்னதி இருக்கும் கோவிலுக்கு புறப்பட்டு சென்று அங்கு சுவாமிக்கு துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை நிறைவேற மனமுருகி வேண்ட வேண்டும். மேலும் ஏழை-எளியோர்க்கு இயன்ற உணவும், நீரும் தானம் அளித்தல் சிறப்பு.

    மேற்கூறிய முறையில் நரசிம்ம ஜெயந்தி அன்று தொடங்கி 21-45 நாட்கள் அல்லது மாதாமாதம் சுவாதி நட்சத்திர நாளில் விரதம் இருந்து வந்தால் தீராத துன்பங்கள், கடன் தொல்லை, தீவினைகள், தோஷங்கள் அனைத்தும் ஓடியே போய்விடும்.

    பிரகலாதன், ஆதிசங்கரருக்காக அருள்புரிந்த நரசிம்ம பெருமாள் நமக்காகவும் நம் துன்பங்களை துடைக்கவும் அருள்புரிவார். ஆகவே நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபாடு செய்து செல்வம், ஆரோக்கியம், நீண்ட புகழ் ஆகியவற்றுடன் நீண்ட காலம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்போம்.

    • நரசிம்ம ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும்.
    • இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    பிரம்மா தன் படைப்புக்கு உதவிபுரிய, சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புத்திரர்களை படைத்தார். அவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானியாக இருந்ததால், இல்லறத்தில் ஈடுபடாமல் தவயோகியாக எல்லா உலகங்களும் சுற்றி வந்தனர்.

    அதன்படி வைகுண்டத்திற்கும் சென்றனர். அப்பொழுது மகாவிஷ்ணுவின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய ஜெய மற்றும் விஜய என்ற இரு துவார பாலகர்களும், பிரம்மஞானிகள் நால்வரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம குமாரர்கள், துவார பாலகர்கள் இருவரையும் சபித்தனர்.

    வைகுண்டத்தின் உள்ளே இருந்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து பிரம்ம குமாரர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம குமாரர்கள், ஜெய, விஜயர்களின் சாபத்தை போக்க எண்ணினர். மகாவிஷ்ணுவும் அதையே நினைத்தார். அவர் ஜெய, விஜயர்களை நோக்கி, "நீங்கள் பிரம்ம குமாரர்கள் சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்துதான் ஆக வேண்டும்.

    அதே நேரத்தில் என்னிடம் பக்தி செய்து என்னை மறுபடியும் அடைய விரும்பினால், நீங்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும். எனக்கு விரோதியாக பிறந்தால் மூன்று பிறவி எடுத்தால் போதும்" என்றார். ஜெய, விஜயர்கள் "நாங்கள் ஏழு பிறவி வரை காத்திருக்க விரும்பவில்லை. உங்களுக்கு விரோதியாகவே பிறந்து மூன்று பிறவிகளில் உங்களை அடைகிறோம்" என்றனர். (அவர்கள் முதலில் இரண்யாட்சன்- இரண்யகசிபு, பின்னர் ராவணன்- கும்பகர்ணன், இறுதியாக சிசுபாலன்- தந்துவர்த்தன் ஆகிய மூன்று பிறவிகளை எடுத்து இறைவனை அடைந்தனர்.)

    அதே நேரத்தில் காசியப முனிவரின் மனைவியரில் ஒருவரான திதி, 'தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையே' என்று வருந்தினாள். ஒரு முறை ஆசிரமத்தில் காசியப முனிவர் இருந்த தருணத்தில் தனது ஆசையை அவள் வெளிப்படுத்தினாள். அப்போது காசியபர், "பெண்ணே.. இது சந்தியா காலம். இந்த நேரத்தில் புத்திர உற்பத்தி நல்லது இல்லை. இரவும் பகலும் சேரக்கூடிய இந்த பிரதோஷ வேளை, பூதங்களும், பிசாசுகளும் விரும்புகின்ற நேரம். இவ்வேளையில் சிவதரிசனம் மட்டுமே சிறந்தது. வேறு சிந்தனை கூடாது. இன்னும் ஒரு முகூர்த்தம் பொறுத்துக்கொள்" என்றார்.

    ஆனால் திதி கேட்பதாக இல்லை. "இவ்வளவு காலம் பொறுத்தாகி விட்டது. புத்திர பாக்கியத்திற்காக இன்னும் தாமதிக்க எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவிட்டாள். 'இது விதியின் சதியே' என்ற முடிவுக்கு வந்தார், காசியப முனிவர்.

    திதியை நோக்கி, "உனக்கு இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். பிரதோஷ நேரத்தில் நாம் சேர்ந்ததால், அவர்கள் ராட்சச தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இருவரும் சக்கரத்தை கையில் ஏந்திய திருமாலால் அழிவார்கள்" என்றார்.

    உடனே திதி, "இத்தனை காலம் ஆன பிறகு பிறக்கும் பிள்ளைகள், அசுரர்களாகவா பிறக்க வேண்டும். நம் வம்சம் சிறக்க ஹரி பக்தியுடன் குழந்தைகள் இருக்க வேண்டாமா?" என்று கேட்டாள். அதற்கு காசியபர், "கவலைப்படாதே. உனக்கு பிறக்கும் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை, விஷ்ணு பக்தியுடன் விளங்குவான். சிறந்த பக்தனாகவும், நாராயண மந்திரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடியவனாகவும் இருப்பான்" என்றார்.

    தொடர்ந்து காசியபர்- திதி தம்பதியருக்கு, இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்யாட்சனை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கொன்றார். இதை அறிந்த இரண்யகசிபு, மகாவிஷ்ணுவை வெற்றிகொள்ள கடும் தவம் செய்யத் தொடங்கினான்.

    இரண்யகசிபு மந்தார மலையில் தவம் செய்த நேரத்தில், அவன் அரண்மனையில் புகுந்த இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை தூக்கிச் சென்றான். அப்போது நாரதர், "இந்திரா.. நீ இவ்வாறு செய்யக்கூடாது. இந்த பெண் கர்ப்பவதியாக இருக்கிறாள்" என்று கூறினார். அதற்கு இந்திரன், "நாரதரே.. இரணியன் எங்களுக்கு மிகுந்த தொல்லையை கொடுக்கிறான். இவனுக்கு குழந்தை பிறந்தால், இதைவிட எங்களுக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்" என்றான்.

    அதற்கு நாரதர் "இப்பொழுது பிறக்கப் போகும் குழந்தை, சிறந்த ஹரி பக்தன். நீ அவனை அழிக்க முடியாது" என்றார். அதைக் கேட்ட இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டான். நாரதர், அந்த பெண்ணை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்த பெண்ணுக்கு நாராயண மந்திரத்தை தொடர்ந்து கூறும்படி அறிவுறுத்தினார். அந்த பெண் சொல்வதை, கருவில் இருந்த குழந்தையும் மந்திர உபதேசமாக எடுத்துக் கொண்டது. அப்படி இறைவனின் நாமத்தைக் கேட்டு பிறந்தவர்தான், பிரகலாதன்.

    இந்த நிலையில் இரண்யகசிபு செய்த கடும் தவந்தால், மூன்று உலகங்களும் தகித்தன. பூகம்பம் ஏற்பட்டது. காடுகள் தீப்பற்றி எறிந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர்.

    பிரம்மதேவர் உடனடியாக இரண்யகசிபு முன்பாக தோன்றினார். "உன் தவத்தை இத்துடன் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றார். அதற்கு இரண்யகசிபு, "எனக்கு மரணம் இல்லாத வரத்தை அருளுங்கள்" என்றான். "மரணமே இல்லாத வரத்தை யாருக்கும் அருள முடியாது. ஆனால் நீ வேறு விதமாக வரம் கேள், தருகிறோம்" என்றார், பிரம்மன்.

    உடனே இரண்யகசிபு, "ஆணாலோ, பெண்ணாலோ, தேவர்களாலோ, அசுரர்களாலோ, உங்களால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசிகளாலும் என் உயிர் போகக்கூடாது. மேலும் பூமியிலும், ஆகாயத்திலும், வீட்டின் உட்புறத்திலும், வீட்டின் வெளிப்புறத்திலும் என் உயிர் பிரியக் கூடாது.

    ஆயுதங்களாலோ அல்லது விஷங்களாலோ என் உயிர் பிரியக்கூடாது" என்று பல விதமான வரங்களைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்டபடி வரம் அருளினார். இதையடுத்து இரணியகசிபு மூன்று உலகத்தையும் வென்றான். மண்ணுலகும் விண்ணுலகும் அவன் வசமாகியது.

    இரண்யகசிபு தனது குருவான சுக்ராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம், பிரகலாதனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உத்தரவிட்டான். பிரகலாதனுக்கு பல வித்தைகளை அவர்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரகலாதனுக்கு குருகுல வாசம் ஆரம்பமாகியது. சில காலம் சென்ற பிறகு இரண்ய கசிபு, குருகுலத்திற்கு வந்து பிரகலாதனிடம் "என்ன கற்றாய்?" என கேட்டான். தன் பிள்ளை 'தன்னைவிட மேலான சக்தி உலகத்தில் எதுவும் இல்லை. தானே மிகப் பெரிய சக்தி, பிரம்மம்' என்று கூறி புகழ்வான் என்று நினைத்தான்.

    ஆனால் பிரகலாதனோ "தந்தையே.. இந்த ஜென்மத்தில் மோட்சம் அடைய ஒரே வழி, ஹரி பக்தி மட்டுமே" எனக் கூறினான். இதைக்கேட்ட இரண்யகசிபு கடும் கோபம் கொண்டு ஆசிரியர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள். இவன் என்ன சொல்கிறான்" என்று கடுமையாக கேட்டான்.

    பின்னர் தன் மகனிடம் திரும்பி, 'என் விரோதியான விஷ்ணுவை புகழ்பவன், மகனாயினும் தண்டிக்கத்தக்கவன்' என கூறி, கடலில் தூக்கிப்போட்டான். ஆனால் அதில் இருந்து பிரகலாதன் மீண்டு வந்தான். பின்னர் ஆயுதங்களால் தாக்கச் சொன்னான். யானையை விட்டு மிதிக்கச் சொன்னான். விஷம் அருந்தக் கொடுத்தான். அனைத்திலும் இருந்து மீண்ட பிரகலாதன், 'எமன் அறியாமல் உயிர் போகாது. விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிரூபித்தான்.

    இனிமேலும் பிரகலாதனை தண்டிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இரண்யகசிபு, நேரடியாக விஷ்ணுவுடன் மோத முடிவு செய்தான். தேவர்களால் மரணம் நேராது என்ற வரத்தை நினைத்துக் கொண்டான். பின்னர் பிரகலாதனை நோக்கி, "உன் விஷ்ணுவை எனக்கு காட்டு. அவனிடம் நான் யுத்தம் செய்கிறேன்" என்றான்.

    "மரியாதைக்குரிய எனது தெய்வமான விஷ்ணு பகவான், நீங்கள் நினைப்பது போல் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவர் அல்ல.. அவர் எங்கும் நிறைந்திருப்பவர்" என்றான், பிரகலாதன். அப்போது இரண்யகசிபு அங்கிருந்த ஒரு தூணைக் காட்டி "இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?" என்றான். அதற்கு பிரகலாதன் "நிச்சயம் இருப்பார்" என்று பதிலளித்தான். உடனே இரண்யகசிபு, தன் வலிமையான கதாயுதத்தைக் கொண்டு அந்தத் தூணை பிளந்தான். அப்போது அதன் உள்ளே இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் தோன்றினார்.

    நரசிம்மர் இரண்யகசிபுவுடன் கடுமையான யுத்தம் செய்தார். பின்னர் அவர் பெற்ற வரத்தின்படியே, இரவும் இல்லாமல், பகலும் இல்லாத பிரதோஷ வேளையில், வீட்டில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசல் படியின் மேல், ஆகாயத்திலும் இல்லாமல், பூமியிலும் இல்லாமல் தன் மடியின் மேல் வைத்து, ஆயுதங்கள் இல்லாமல் தன் கை நகங்களால் அவனை வதம் செய்தார்.

    இரண்யகசிபு வதம் முடிந்த பிறகு லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்து, பிரகலாதனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார் நரசிம்மர். அதற்கு பிரகலாதன், "என் தந்தை தவம் செய்து பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களால் வதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மோட்சம் வழங்க வேண்டும்" என்றான்.

    அதற்கு நரசிம்மர், "நீ என் மீது பக்தி கொண்டு பிறந்த காரணத்தினால், உன் தந்தைக்கு மட்டுமல்ல.. உனக்குப் பின் வரக்கூடிய 21 தலைமுறையினர் உன்னால் மோட்சம் அடையப் போகிறார்கள்" என்றார்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும். செய்வினை, ஏவல் போன்ற பிரச்சினை அகலும். இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    ×