search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டங்கத்தரி"

    • பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
    • கண்டங்கத்தரி பழங்கள், தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை.

    கத்திரிக்காய் வகைகளில் ஒன்றுதான் இந்த கண்டங்கத்திரி. கண்டங்கத்திரியில் அல்கலாய்ட்ஸ், கிளைகோசைட்ஸ், சாப்போனின்ஸ், பிளாவினாய்ட்ஸ், சோலாசொடின், கவுமாரின் போன்றவை உள்ளன. இதில் நோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகின்றது. எனவே சித்தமருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

    கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.

    பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

    ஒடிசாவில் உள்ள தென்கனல் மாவட்டத்தை சேர்ந்த குந்த் பழங்குடியினத்தவர்கள் இந்த பழத்தின் டிகாஷனை, சர்க்கரை நோய்க்கு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்துகின்றனர். எனினும் இதன் ரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் குறித்து பெரிய மருத்துவ ஆராய்ச்சிகளோ அல்லது மருத்துவ ஆய்விதழ் வெளியீடுகளோ இதுவரை இல்லை.

    இதில் உள்ள அல்கலாய்ட்ஸ் தன்னுடல் தாக்குநோய் (ஆட்டோ இம்யூன் நோய்) மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். மேலும், அதிகமான அளவு உட்கொள்ளும்போது இதில் உள்ள சோலானின் ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற உணவு நஞ்சாதல் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    ஆகையால் உங்கள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கண்டங்கத்திரியை மட்டுமே சார்ந்திருக்காமல் அலோபதி மருத்துவ முறையை பின்பற்றலாம். உங்கள் தற்போதைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரியை (எச்.பி. ஏ1சி) பரிசோதித்து, ரத்த சர்க்கரை கட்டுக்குள் உள்ளதா என்பதை கண்டறிந்து, அருகில் உள்ள மருத்துவரை கலந்தாலோசித்து பயன்படுத்தலாம்.

    ×