என் மலர்
நீங்கள் தேடியது "புரோபயாடிக் உணவுகள்"
- வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும்.
- மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்துக்கொண்டிருக்கிறது. வெயில் அதிகரித்த சமயத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் உடல் உஷ்ண பிரச்சினையை எதிர்கொண்டவர்கள், கோடை மழையால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். என்னென்ன விஷயங்களை செய்யலாம்? செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
உணவில் கவனம்
உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நன்கு வேகவைக்கப்படாத உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதல் நேரமாகும். சிலருக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் துரித உணவுகளை தவிருங்கள். சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்துவிட்டு உட்கொள்ளுங்கள். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும்.
வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக கோடை காலம் முடிந்து மாறும் பருவ நிலை மாற்றத்தையும், கோடை மழையையும் எதிர்கொள்ள உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்யும். நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
புரோபயாடிக் உணவுகளை உண்ணுங்கள்
மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும்.
சுற்றுப்புற தூய்மை
பருவ நிலை மாறுபாடும், மழை நீர் தேங்குவதும் கொசு உற்பத்திக்கு வித்திடும். டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை கொசுக்கள் பரவச் செய்துவிடும். கோடை மழையின்போது தாழ்வான பகுதியில்தான் மழைநீர் அதிகம் தேங்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியை தடுக்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். கைகள், உடலை முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுங்கள்.
தனிப்பட்ட சுகாதாரம்
வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உடலை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக கால்கள் மற்றும் கை விரல்கள் உலர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் விரல்களுக்கு இடையே பூஞ்சை தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.
வடிகட்டிய நீரை பருகுங்கள்
கோடை காலம் முடிவுக்கு வந்து பருவ நிலை மாறுவதற்கு ஏற்ப பருகும் தண்ணீரையும் மாற்ற வேண்டும். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்த்து தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். வடிகட்டிய தண்ணீரை பருகுவதும் நல்லது. மழை சமயங்களில் குடிநீரில் அசுத்த நீர் கலந்தால் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். அதனை கருத்தில் கொண்டு தண்ணீர் பருக வேண்டும்.
மழையில் நனையாதீர்கள்
மழையில் நனைவதை முடிந்தவரை தவிருங்கள். எதிர்பாராதவிதமாக மழையில் நனைந்து உடல் ஈரமாகிவிட்டால் வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிடுங்கள். அது காய்ச்சல் உள்பட பிற நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
- கால நிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சருமத்தின் தன்மையும் மாறுபடும்.
- எந்த காலநிலை மாற்றமாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்.
சருமம் பொலிவுடன் மிளிர வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். கால நிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சருமத்தின் தன்மையும் மாறுபடும். வறண்ட, ஈரப்பதமான தன்மையை கொண்டிருக்கும். அதனை சீராக பராமரித்து ஒளிரும் வகையில் காட்சி அளிக்க உதவும் பொருட்கள் பற்றி பார்ப்போம்.

சன்ஸ்கிரீன்
15 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். அது தோல் புற்றுநோயை தடுக்க உதவிடும். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்தும் காக்கும். சருமம் விரைவில் வயதாகும் தன்மையை கட்டுப்படுத்தும். கடும் வெப்பமாக இருந்தாலும், குளிர்ச்சி தரும் பனிப்பொழிவாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்.
சூடான நீர்
மிதமான வெப்பம் கொண்ட வெதுவெதுப்பான நீர் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும். ஆனால் அதனை அடிக்கடி பயன்படுத்துவது, அதிக சூடாக இருப்பது சருமத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை அகற்றி சோர்வாகவும், மந்தமாகவும் உணர வைத்துவிடும். அதனால் மிதமான அளவில் உபயோகிப்பது நல்லது.

முகம் கழுவுதல்
தினமும் முகம் கழுவுவது புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆனால் அடிக்கடி கழுவுவது நல்லதல்ல. காலையில் எழுந்ததும் முகம் கழுவும் வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிப்பது போல கடுமையான வேலைப்பளுவின்போது சோர்வாக உணர்ந்தால் அப்போதும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவலாம். அதன் பிறகு இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தப்படுத்துவது நல்லது.
புகைப்பழக்கம்
புகைப்பிடிப்பது, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதில் இருக்கும் ரசாயனங்கள் சரும செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முன்கூட்டியே வயதாகும் செயல்முறைக்கு வித்திடும். புகைப்பிடிக்க தோன்றும் சமயங்களில் எல்லாம் அதற்கு மாற்றாக தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுங்கள். அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.

தேங்காய்எண்ணெய்
இது சரும அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. எனினும் எல்லா வகையான சருமத்திற்கும் தேங்காய் எண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அதிலும் தேங்காய் சார்ந்த ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம். தேங்காய் எண்ணெய் ஒத்துக்கொண்டால் அதனை பல வகைகளிலும் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படும். முகத்தில் சிறிதளவு அந்த எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யலாம். சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கழுவிவிடலாம்.
குடிநீர்
தண்ணீருக்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் வலுவான தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

மாய்ஸ்சுரைசர்
தினமும் முகத்தை கழுவிவிட்டு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இளமை தோற்றப்பொலிவையும் கொடுக்கும். எந்த காலநிலையாக இருந்தாலும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.

காய்கறிகள்-பழங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் வழக்கத்தை தொடர்வது உடலில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். மீன் எண்ணெய்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பதும் பொலிவான சருமத்திற்கு வித்திடும்.
புரோபயாடிக் பொருட்கள்
யோகார்ட் போன்ற புரோபயாடிக் உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் சரும ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். கூடுதல் பொலிவுக்கும் வித்திடும். முகத்தில் தயிர் பூசியும் பொலிவு சேர்க்கலாம்.

கற்றாழை
சருமத்தை வலுவாக வைத்திருக்க கற்றாழை பயன்படுத்தலாம். புதிய உயிரணு வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவும். தினமும் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை கொடுக்கும். சிலருக்கு கற்றாழை ஒவ்வாமையை ஏற்படுத்தும். கையில் சிறிதளவு தடவி பரிசோதிக்கலாம். 24 மணி நேரம் வரை எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.