என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசி மாவட்ட கலெக்டர்"
- அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
- 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (வயது 17) என்ற மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய குற்றாலம் அருவி பகுதி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் வனத்துறை வசம் ஒப்படைத்து விட்டதாகவும் ஏற்கனவே குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி நிர்வாகம் வனத்துறை வசம் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
ஏற்கனவே தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல ஆண்டுகாலம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வந்த பழத்தோட்ட அருவியை தோட்டக்கலைத் துறையிடம் இருந்து வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்று அந்த அருவியை நிரந்தரமாக மூடிவிட்டனர்.
மேலும் சிற்றருவி, செண்பகாதேவி ஆகிய அருவிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தடை விதித்ததோடு அங்குள்ள புகழ்பெற்ற செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை கூட அங்கு செல்ல விடாமல் கெடுபிடி செய்து வருகிறார்கள்.
மேலும் குற்றாலத்தில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக குளித்து வந்த சிற்றருவியை கைப்பற்றிய வனத்துறை இப்போது அங்கு குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்வதோடு அந்த அருவிக்கு செல்லும் பாதையில் நிரந்தர கேட் அமைத்து பூட்டியுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் உள்ள அருவிகள், கோவில்கள், நீர்நிலைகளுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு வனத்துறையினர் கெடுபிடி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
எனவே பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கூறியதாவது:-
மாவட்ட வனத்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய குற்றாலம் அருவி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை.
ஆனால் பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு மேல் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்துவது குறித்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மற்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.