என் மலர்
நீங்கள் தேடியது "சுயம்புமூர்த்தி"
- கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஏழு தலங்களில் ஒன்றாகும்.
- சுயம்புவாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஏழு தலங்களில் ஒன்றாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்று சிறப்புகளையும் கொண்ட இக் கோவிலில் அம்மையும், அப்பனும் கலந்த திருமேனியாக சுயம்புவாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.
சிவன் வலது புறத்திலும், பார்வதி தேவி இடது புறத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக் கோவில் தோன்றியதாக அறியப்படுகிறது. ஆனாலும் யாரால் எந்த காலக்கட்டத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த கோவில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி அருகே செங்கோட்டு வேலர், ஆதிகேசவப்பெருமாள் சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் வெண் பாசனத்தால் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் தான் அர்த்தநாரீஸ்வரர் அபிஷேகத்துக்கு பால், இளநீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அர்த்தநாரீஸ்வரரை திருஞான சம்பந்தரும், செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதரும் இத்தலத்தில் பாடியுள்ளனர். சிலப்பதிகாரம் முதலிய பண்டைய தமிழ் நூல்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களில் திருச்செங்கோடு அர்த்தாரீஸ்வரர் கோவில் போற்றப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு திருமண மாகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், வழக்கு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் வந்து அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவரை வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பதால் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாபநாச தீர்த்தம், தின்ம தீர்த்தம், எந்திர தீர்த்தம், வாயு தீர்த்தம் மற்றும் சப்த கன்னிமார் தீர்த்தம் முதலான பலத்தீர்த்த சிறப்புகளை பெற்று இக்கோவில் விளங்கி வருகிறது.
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே எழுந்த போரில் பெயர்த்து கொண்டு விண்ணில் பறந்து வந்து விழுந்து மேருவின் சிகரங்களுள் ஒன்று மூன்று பாகங்களாகி அவைகளில் ஒரு பாகம் ஆதிசேஷனின் சிரத்துடன் விழுந்த திருச்செங்கோடாக அமைந்தது என்பது புராண வரலாறு.
இதன் காரணமாவே இக் கோவிலுக்கு நாகமலை, சேடமலை, மேருமலை, வாயுமலை, முதலான சிறப்பு பெயர்களும் ஏற்பட்டன. இதோடு இல்லாமல் பார்வதி தேவி இடப்பாகம் பெற்ற வரலாறு, பிருங்கி முனிவர் வழிபாடு பற்றிய வரலாறு போன்ற புராண வரலாற்று சிறப்புகளையும் இக்கோவில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.