search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழப்புழா"

    • காரின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
    • 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூடியூபரான இவர் தனது சேனலில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வந்தார். அதன் மூலமாக மிகவும் பிரபலமா னார். அவரது யூ-டியூப் சேனலை 1.6 மில்லியன் சந்தாதாரர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சஞ்சு டெக்கி, நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார். அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே காரை சாலையில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவர்களது காரில் பிரச்சினை ஏற்பட்டதால் காரில் இருந்த தண்ணீரை சாலையில் வெளியேற்றினர்.

    அவர்களின் இந்த நடவடிக்கையால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சஞ்சு டெக்கி இந்த காட்சிகளை யூடியூப்பில் நேரலையில் பதிவிட்டதால் அவர் நண்பர்களுடன் காருக்குள் குளித்தது, தண்ணீரை சாலையில் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அனைத்தும் யூ-டியூப் நேரலையில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகள் சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சஞ்சு டெக்கி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மேலும் சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில் சஞ்சு டெக்கி, அவரது நண்பர்கள் சூர்யநாராயணன், அபிலாஷ், ஸ்டான்லி கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அவர்கள் 3 பேரும் வருகிற 3-ந்தேதி முதல் மலப்புரம் எடப்பால் பகுதியில் உள்ள மோட்டார் வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டாய பயிற்சியில் பங்கேற்க வேண்டும், ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சமூகவேலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    ×