search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்மந்திரி"

    • மோகன் சரண் மாஜி இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்.
    • பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடந்த சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.

    ஒடிசா சட்டசபைக்கு மொத்தம் உள்ள 147 இடங் களுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 77 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. பிஜூ ஜனதா தளத்துக்கு 51 இடங்களும், காங்கிரஸ்-14, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு-1 இடமும் கிடைத்தன. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. மேலிடப் பார்வையாளர் களாக மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

    ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவியேற்க உள்ளனர். மேலும் மந்திரி களும் பதவி ஏற்பார்கள். புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் பா.ஜ.க.வின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.

    ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் மோகன் சரண் மாஜி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கியோஞ்சர் மாவட்டத்தில் ராய்கலா கிராமத்தில் காவலாளிக்கு மகனாக பிறந்தார். அந்த கிராமத்து தலைவராகி பொதுவாழ்வை தொடங்கினார்.

    பட்டதாரியான இவர் 2000-ம் ஆண்டு தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2004, 2019 தேர்தல்களில் வெற்றிபெற்றார். தற்போதும் வெற்றிபெற்று முதல்-மந்திரியாக பதவியேற்கிறார். பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு செயலாளராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார்.

    முதல்-மந்திரியாக பதவி யேற்க உள்ள மோகன் சரண் மாஜி சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    ஜெகந்நாதர் அருளால் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. இந்த நேரத்தில் 4.5 கோடி ஒடிசா மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்து உள்ளார்கள். அந்த நம்பிக்கையை பா.ஜ.க. அரசு காப்பாற்றும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×