என் மலர்
நீங்கள் தேடியது "மதுபான ஆலை"
- டாஸ்மாக் ஊழலில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்
- டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலென ED குறைத்து கூறுவது யாரைக் காப்பாற்ற என சீமான் கேள்வி
டாஸ்மாக் ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு இலட்சம் கோடிகளுக்கும் மேல் இமாலய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில், பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசைக் காப்பாற்றும் நோக்கில் 1000 கோடிகள் என குறைத்துக்கூறி விசாரணையைச் சுருக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசு மதுபானக்கடை சில்லறை விற்பனையில் போத்தலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்தது தொடங்கி, மதுபான கொள்முதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, டாஸ்மாக் வாகன போக்குவரத்து உரிமம், மதுபானக்கூட உரிமம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் என பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. அதைத்தவிர டாஸ்மாக் மதுபான விற்பனையில் 50% மேல் கணக்கில் காட்டப்படாமல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திமுக அரசின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான ஐயா பழனிவேல் தியாகராஜன் ஆங்கில நாளிதழ் நேர்காணலில் அளித்துள்ள வாக்குமூலமும் திமுக அரசின் மதுபான ஊழலுக்கு மறுக்க முடியாத சான்று பகிர்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இல்லாமல் திடீரென திமுக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதும், மக்களவை தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, அனைத்துக்கட்சி கூட்டம் என திமுக அரசு ஆடும் அரசியல் ஆட்டங்கள் அனைத்தும் தன் மீதான பல்லாயிரம் கோடி மதுபான ஊழலை மறைக்க நடத்தும் நாடகமேயாகும்.
ஆம் ஆத்மி அரசின் மதுபான ஊழலில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, தெலுங்கான மாநில மதுபான ஊழலில், ஆட்சியின் அதிகார மையமாக இருந்த அன்றைய முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் அன்புமகள் அம்மையார் கவிதா அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால், 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் விசாரணையை விரிவாக்கி அப்படி எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்?
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில், அம்மாநிலங்களின் துறைசார்ந்த அமைச்சர்கள் முதல் முதலமைச்சர், முதல்வரின் குடும்பத்தினர் வரை ஊழலில் பங்குபெற்ற அனைவரும் பாகுபாடின்றி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் திமுக அரசிற்கு ஆதரவாக அமலாக்கத்துறை தொடர்ச்சியாக செயல்படுவது ஏன்? அப்படியென்றால எதிர்க்கட்சிகள் செய்யும் ஊழல் முறைகேடுகளை அமலாக்கத்துறை மூலம் வெளிப்படுத்துவதை வெறும் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே பாஜக அரசு பயன்படுத்துகிறதா? அதனால்தான் திமுக அரசு செய்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை மூலம் குறைத்துக்காட்டி மூடி மறைக்க முயல்கிறதா பாஜக அரசு? திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? முழுமையாக விசாரணை நடத்தாமல் 1000 கோடிகள் மட்டுமே ஊழல் என்று அவசரமாக அறிவித்தது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு என்று அமலாக்கத்துறை அறிக்கை அளித்தது எப்படி? மக்களின் வரிப்பணத்தை மீட்க வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே அமலாக்கத்துறைக்கு இருக்குமாயின், மற்ற மாநில மதுபான ஊழலில் காட்டிய வேகத்தையும், தீவிரத்தையும் திமுக அரசின் மதுபான ஊழல் விசாரணையில் காட்ட தயங்குவது ஏன்? இதன் மூலம் பாஜக - திமுக இடையேயான மறைமுக உறவு மீண்டுமொருமுறை வெளிப்படுகிறது.
ஆகவே, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இமாலய மதுபான ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள், உயர் அதிகார மையத்தில் உள்ளவர்கள் வரை அனைவரையும் கைது செய்து விசாரணை வளையத்தை விரிவு செய்து, பாகுபாடற்ற நேர்மையான விசாரணை நடத்தி, பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு நடைபெற்றுள்ள ஊழலை முழுமையாக வெளிப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை முழுவதுமாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டெண்டரில் KYC, DD தரவுகள் ஒத்துப்போகவில்லை. பார் உரிமங்கள் பெறுவதற்கான டெண்டரில் GST, PAN நம்பர் இல்லை.
டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.
பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாட்டிலுக்கு எம்ஆர்பி தொகையைவிட ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டில்களை குடோனுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மது ஆலை நிறுவனங்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ரூ.1000 கோடி முறைகேட்டில் மதுவுக்கான பாட்டில்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு முக்கிய பங்கு.
ஏலத்தில் காலக்கெடு முடிவதற்குள் டிடி வழங்காமலே சலுகை வழங்கியதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை ஊதிப்பெருக்கி காண்பித்து, ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர்.
- தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோம் டிஸ்டில்லரீஸ் & ப்ரூவரீஸ் என்பது பீர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஆர்டிடி (குடிக்கத் தயார்) பானங்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் ஐஎஸ்ஓ-சான்றளிக்கப்பட்ட குழுவாகும்.
பச்பன் பச்சாவ் அந்தோலன் (பிபிஏ) என்றும் அழைக்கப்படும் தன்னார்வ நடவடிக்கை சங்கத்துடன் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) இணைந்து சோம் என்கிற மதுபான ஆலையில் சோதனை மேற்கொண்டது.
என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு, மதுபான ஆலையில் இருந்து 58 குழந்தைகள், 19 பெண்கள் மற்றும் 39 ஆண் குழந்தைகளை மீட்டதாக பிபிஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறுகையில், "கடுமையான ரசாயனங்கள் மற்றும் மதுவின் தயாரிப்பால் குழந்தைகளின் கைகளில் தீக்காயங்கள் உள்ளன. அவர்கள் தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர். தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.
இதுகுறித்து 'எக்ஸ்' பதிவில், முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில்," தொழிற்சாலையில் நடந்த சோதனை தீவிரமான விஷயம். தொழிலாளர், கலால் மற்றும் காவல் துறைகளில் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.