search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம். வழிபாடு"

    • திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது.
    • திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார்.

    இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது, திருமாலின் அவதாரமான நரசிம்ம அவதாரம். அவர் உடனடியாக பக்தர்களுக்கு பலன் அளிப்பவர்.

    அப்படிப்பட்ட நரசிம்மர் அருளும் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படி ஒரு உன்னதமான தலம்தான், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோவில்.

    தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர், புலஸ்திய மகரிஷி தவம் இயற்றிய காரணத்தால் 'புலஸ்தியபுரம்' என்று புராணப் பெயர் பெற்றது. போளூர் நகரின் மேற்கே அமைந்துள்ளது, சம்பத்கிரி என்ற மலை.



    இங்கு குபேரனுக்கு அனைத்து சம்பத்களையும் (செல்வங்களையும், பொருளையும்) நரசிம்மர் வழங்கியதால், இது 'சம்பத்கிரி' என்று பெயர் பெற்றது.

    'பொருள்' நிறைந்த ஊர் என்பதாக, சம்பத்கிரி மலைக்கு கீழே அமைந்த ஊரை 'பொருளூர்' என்று அழைத்தனர். அதுவே மருவி 'போளூர்' என்றானதாக சொல்கிறார்கள். சம்பத்கிரி மலையில் சப்தரிஷிகளும் தவம் இயற்றியதாக கூறப்படுகிறது.

    சப்தகிரி மலையில் புலஸ்தியர் மற்றும் பவுலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள், திருமாலை நோக்கி தவம்புரிந்து வந்தனர். அந்த தவத்தின் பயனாக கோவிந்தனிடம் இருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாக கிடைத்தது. அதை பங்கிடும் போட்டியில் பவுலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன.

    இதையடுத்து பவுலஸ்தியர், இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையை கிரிவலம் வந்தார்.

    48-ம் நாள் சேயாற்றில் மூழ்கி எழுந்தபோது, அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் நரசிம்மர் விக்கிரகமும் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி கூறிட, அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. அதை கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    அன்றே ஊரில் இருந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லட்சுமி நரசிம்மராக, சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். இதையடுத்து அங்கே ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடந்து வருகிறது.

    மலை மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ள நரசிம்மமூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஊருக்குள் ஒரு ஆலயம் எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு விஜயநகர அரசர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

    பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர், உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களின் விக்கிரகத்தையும் இங்கே நிறுவியுள்ளார். மேலும் பாமா - ருக்மணி உடனான வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவினார்.

    இந்த சம்பத்கிரி மலை சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கும் சன்னிதி இருக்கிறது. அதோடு நான்கு ஓய்வு மண்டபங்களும் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர் சுனைகள் காணப்படுகின்றன.

    மலை மீது ஏற, ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. மலை உச்சியில் அரண் போன்று மலையைச் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலயத்தின் முன்பு பலிபீடம், தீப ஸ்தம்பம், கருடாழ்வார் உள்ளனர். மின்னொளியில் மின்னும் வகையில், சங்கு, சக்கரத்துடன் திருநாமம் அமைக்கப்பட்டிருக்கிறது.


    கருவறைக்குள் சுயம்புவாக திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு முன்பாக லட்சுமி தேவியின் நரசிம்மமூர்த்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இவரது சன்னிதிக்கு வலது புறம் கனகவல்லி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. மலை மீது பிரம்ம தீர்த்தமும், மலையின் கீழ் புலஸ்திய தீர்த்தமும் இருக்கின்றன. பாஹுநதி என்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாக விளங்குகிறது.

    இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு சுவாதி, மாத பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

    சித்திரை வருடப்பிறப்பில் படிவிழா, வைகாசியில் 10 நாள் பிரமோற்சவம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்றவை மலைக் கோவிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளாகும்.

    திருமணவரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய - மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபட, பிரதோஷ நாட்களில் சம்பத்திரி லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள பாமா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன நைவேத்தியங்களை படைத்து கிரிவலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது சம்பத்கிரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.

    சனிக்கிழமை மட்டும்...

    மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    அதே நேரம் கீழே உள்ள வேணுகோபாலர் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்.
    • சடாரி என்பது என்ன?

    பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..?

    அப்படியான ஒரு விஷயம் தான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவை. பகாவனை கண்குளிர சேவித்து, தீபாரதனை முடித்து துளசி தீர்த்தம் ஆன பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது.

    சடாரி என்பது என்ன? அது ஏன் நம் தலை மீது வைக்கப்படுகிறது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.


    ஒருமுறை வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம், தன்னுடைய சங்கு, சக்கரம் திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன் வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

    ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும் சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன ஆனால் அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து

    கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன

    "இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்' என்றன பாதுகைகள்.

    பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும். சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு, பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.

    உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் அலங்கரிப்பவர்கள்தான் ஆனால், பாதங்களை அல்ல.

    மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன.

    கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பகவானிடம் முறையிட காத்து நின்றன. பகவானும் வந்தார்.


    அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. 'இங்கே நடந்ததை நான் அறிவேன் என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும்.

    அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

    அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.


    சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.

    • 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.
    • லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார்.

    சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ளஈகை. இந்த கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயமானது, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.

    ஒரு கட்டத்தில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி கிடந்த இந்த ஆலயத்தை, அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைப்போடு, புனரமைத்ததோடு, ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடந்த 2013-ம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சை பசேலென்று இயற்கை படர்ந்த பள்ளஈகை கிராமத்தில் இத்தலம் அழகுற அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது.

    இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

    மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் சிலை ரூபத்தில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இவ்வாலய மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார். அவர் தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது.

    அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

    தாயாருடன் அருளும் இத்தல பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் இத்தலத்திற்கே உரிய பெரும் சிறப்பாகும். இதுதவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    ஆண்டுதோறும் இத்தலத்தில் பலவிதமான விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, ஆனித் திருவோணம் (கும்பாபிஷேக தினம்), ஆவணி மாதத்தில் திருபவித்ரோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் (சங்கராந்தி), ராமநவமி, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்வாலயத்தில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பள்ளஈகை கிராமம் அமைந்துள்ளது.

    ×