search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய எண்ணெய்"

    • 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சில ஓட்டல்கள் மற்றும் சாலை ஓரங்களில் செயல்படும் பானிபூரி உள்ளிட்ட கடைகளில் பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின்பேரில் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் பழைய உணவு எண்ணெய் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

    எனவே 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் முன்தயாரிப்பு செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தியபோது சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் வகையில் பழைய பொருட்களை பயன்படுத்திய உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானி பூரி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பானிபூரி கடையில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பானிபூரி மசாலா, உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆய்வறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

    ×