search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்"

    • புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை.
    • 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க., வக்கீல்கள் இன்று காலையில் இந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.

    அப்போது என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், இந்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரான வையாக உள்ளது. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்று கூறினார்.

    இந்த நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பின்னர், இதுகுறித்து ஜி.மோகன கிருஷ்ணன் கூறும்போது, `3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

    ×