search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள்"

    • இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.
    • ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது.

    கொழும்பு:

    சர்வதேச வர்த்தக வழித்தடத்தில், தென்கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையிலான முக்கியமான கடல்வழிப்பாதையில் இலங்கை அமைந்துள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக இலங்கை துறைமுகங்களில் நின்று செல்கின்றன.

    ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன ஆய்வுக் கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கேட்டபோது, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது, இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் என்று இந்தியா கருதியதே அதற்கு காரணம்.

    ஆனால், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.

    அதுபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான்-6' கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இருப்பினும், இந்தியாவின் கவலைகளை தீர்க்கும்வகையில், வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு அறிவித்தது. இந்த தடை அமலில் உள்ளது.

    இந்நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் விஷயத்தில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது. சீன கப்பலுக்கு மட்டும் தடை விதிக்க முடியாது.

    இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையில் இலங்கை ஒருதரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படாது.

    வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அத்தடை விலக்கிக் கொள்ளப்படும். இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை நிறுத்த அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×