என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடி மாத வழிபாடு"
- தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது.
- ஆடி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. குறிப்பாக ஆடி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. ஆன்மிக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்கள் எல்லாம் களைகட்டி காணப்படுகிறது.
அம்மன் வழிபாடு
ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்றும் அழைப்பதுண்டு. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி என்பது சிறப்பு மிக்க ஆன்மிக மாதம் ஆகும். இது தமிழ் மாதத்தின் 4-வது மாதமாகும்.
வேத பாராயணங்கள், ஆலய சிறப்பு வழிபாடுகள், மந்திரங்கள், பூஜைகள் ஆகியவற்றிக்கு கூடுதல் சக்தி அளிக்கும் மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும். இது ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதமாகவே திகழ்கிறது.
ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருடபஞ்சமி என தொடர்ச்சியாக சுப தினங்கள் வந்து கொண்டே இருக்கும். இம்மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர்.
ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மன், வேப்பிலை, மஞ்சள், மற்றும் கூழ் ஊற்றுதல், பெரும்பாலான வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். இதன் அறிவியல் அடிப்படை என்பது கோடை காலம் முடிந்து பருவநிலை ஏற்படும் மாற்றம் பலவிதமான நோய்களை கொண்டு வரும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் நோய் கிருமி தடுப்பானாக செயல்படுகிறது. மேலும் கூழ் வகை உணவுகள் உடலுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
பெரும்பாலான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு வழிபாடு என பலவிதமாக அம்மனுக்கு வழிபாடு நடைபெறும்.
ஆடி மாத அமாவாசையன்று புனிதநீர் நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு திதி செய்வார்கள். இதன் மூலம் முன்னோர்கள் ஆன்மா மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தில் 18-ம் நாளில் கொண்டாடப்படுகின்றது. இது 18-ம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது.இப்படி அம்மனுக்கு பல விதமாக வழிபாடுகளை கொண்ட மாதமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பதே சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு.
இம்மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் விரதம் இருந்து காலை, மாலை வேளைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
அதன்படி ஆடி மாதம் பிறந்ததையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.
- ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு.
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.
கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.
ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும்.
ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
அதேபோல் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, எள்ளு கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்த வழிபடலாம்.
வழிபடும் முறை
* அதிகாலையில் பெண்கள் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
* வேப்ப இலையை கொண்டு வந்து உங்களுடைய வீட்டின் நிலை வாசலில் கட்டி வைத்துவிடுங்கள்.
* ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு வேப்ப இலை போட்டு, இந்த தீர்த்தத்தில் உங்களுடைய குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
* பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.
* அம்மனையும் குலதெய்வத்தையும் கலச சொம்பில் ஆவாகனம் செய்து, இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைத்து, தீப ஆராதனை காட்டி மனதார ஆடி மாத பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
- சங்கரன்கோவிலில் ஆடி தபசு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- பெரிய பாளையத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைெபறும்.
4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
6. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
7. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.
8. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
9. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.
10. தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை முவ்வாறு பதினெட்டு என்று குறிப்பிட்டுள்ளனர்.
11. ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.
12. ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
13. திருச்சி அருகே உள்ள திருநெடுங்காநாதர் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.
14. சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாகும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள். பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவிவிடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.
15. சென்னை திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
16. கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.
17. ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுரபேரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.
18. செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக்கண் ணியம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்ேபாது 10,000 ேபருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.
19. தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
20. தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
21.புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக் கோலம்தான்.
22.சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இந்த அம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று இந்த அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
23. திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
24. ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.
25. திருவல்லிக்கேணி எல்லை அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ''சுவாசினி பூஜை'' நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
- அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
- ஆடி மாதம் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது.
ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால் நீங்களும் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயத்துக்கு தவறாமல் செல்வீர்கள். அதைப் பார்க்கலாம்...
தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்க்கு சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.
மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும்.
ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.
தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.
தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, அம்மன் வழிபாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத்தின் சிறப்பாகும்.
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார். கடகம் சந்திரன் வீடு பெண் ராசி. பெண் வீட்டில் ஆண் கிரகமான சூரியன் நிற்பதால் ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.
சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.
உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
"ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.
வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.
குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.
லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.
அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.
இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?
அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.
அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.
அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.
ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்ப தால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.
குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.
தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.
வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்