search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டுமா?
    X

    ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டுமா?

    • அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
    • ஆடி மாதம் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது.

    ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால் நீங்களும் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயத்துக்கு தவறாமல் செல்வீர்கள். அதைப் பார்க்கலாம்...

    தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்க்கு சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.

    மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.

    ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும்.

    ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.

    தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.

    தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, அம்மன் வழிபாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத்தின் சிறப்பாகும்.

    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார். கடகம் சந்திரன் வீடு பெண் ராசி. பெண் வீட்டில் ஆண் கிரகமான சூரியன் நிற்பதால் ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.

    உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    "ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.

    வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.

    அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

    இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

    அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

    அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.

    அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.

    ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்ப தால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    Next Story
    ×