search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் விலை குறைவு"

    • தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
    • தினசரி விற்பனை 5400 கிலோவாக அதிகரிப்பு.

    சென்னை:

    தங்கத்தின் விலை எப்போது குறையும்? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதன் விலை குறைவு இன்ப அதிர்ச்சியாக மாறி இருக்கிறது என்றே கூறலாம்.

    கடந்த 23-ந் தேதி வெளியான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்கு மதி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. 15 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.

    கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கடுமையான ஏறுமுகத்திலேயே இருந்தது. கடந்த 17-ந் தேதி அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.55,360 ஆக இருந்தது. இது பட்ஜெட் வெளியான 23-ந் தேதி அன்று ரூ.54 ஆயிரத்து 600 ஆக குறைந்தது.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் வரையில் 7 மாதத்தில் தங்கத்தின் விலை உச்சத்தையே தொட் டிருந்தது. இந்த காலகட்டத் தில் பவுனுக்கு ரூ.8 ஆயிரத்து 80 என்கிற அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விலை இதைவிட மேலும் அதிகரிக்கும் என்றே எதிர் பார்த்து இருந்த நிலையில் தான். மத்திய அரசு தங் கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்தது.

    இதன் காரணமாக கடந்த 23-ந் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக குறைந்துள்ளது.

    பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்ட உடனையே அன்று மாலையில் இருந்து விலை குறைய தொடங்கியது 23-ந்தேதி அன்று பவுனுக்கு ரூ.2200 குறைந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக மேலும் குறையத் தொடங்கியது.

    அடுத்த 4 நாட்களில் அதாவது 27-ந் தேதி அன்று கிராமுக்கு ரூ.410 குறைந்து பவுனுக்கு ரூ.3280 அதிரடியாக குறைந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் குறைந்து அதிரடி சரிவை சந்தித்துள்ளது.

    இதன் காரணமாக நேற்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டு கிராமுக்கு ரூ.440 என்கிற அளவில் குறைந்திருக்கிறது. அதனால் பவுனுக்கு ரூ.3540 என தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது.

    தங்கத்தின் இந்தவிலை குறைவால் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாகவே தங்கத்தை நகையாகவும் நாணயங்களாகவும் வாங்கி குவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை தங்கம் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோல்டு குரு சாந்தகுமார் கூறும்போது, `பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால் தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களின் வாங்கும் சக்தி மிகவும் அதிகரித்துள்ளது. 20 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விற்பனை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள தங்க நகை கடைகளில் தினமும் 4 ஆயிரத்து 500 கிலோ என்கிற அளவுக்கு தங்கம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு விற்பனை உயர்ந்து இருப்பதால் கூடுதலாக தினமும் 900 கிலோ என்கிற அளவுக்கு தங்கத்தின் விற்பனை அதிகரித்து உள்ளது.

    இதனால் தினமும் விற்பனையாகும் தங்கத்தின் அளவு சுமார் 5400 கிலோவாக உயர்ந்து இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேநேரத்தில் நாடு முழுவதுமே தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப நகைகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக தங்கத்தின் விற்பனை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆடி மாதம் முடிந்ததும் ஆவணி மாதத்தில் திருமணங்களை நடத்த திட்டமிட்டுள்ள பலரும் நகைகளை வாங்கி வருவதால் நகை விற்பனை களை கட்டத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலையில் இருந்து வருகிறது.

    தங்கத்தின் இந்த விலை சரிவு தற்காலிகமானது தான் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    அதே போன்று விலை உயர்வு ஏற்பட்டால் தாங்கள் விரும்பும் அளவுக்கு தங்கத்தை வாங்க முடியாதே என்கிற எண்ணத்தில் கையில் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து அதனை வாங்கி குவித்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இன்னும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டு அதன் பின்னரே விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து மக்களின் வாங்கும் சக்தி மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ×