என் மலர்
நீங்கள் தேடியது "படகுகள் பறிமுதல்"
- 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
- இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?
சென்னை:
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.
அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.
இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந்த தீர்வு காண கோரி மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மீனவர்கள் கைது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியா-இலங்கை இடையே நாகப்பட்டினம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடல் பகுதி 25 முதல் 40 கி.மீ. வரை மட்டுமே அகலம் உள்ள கடற் பகுதியாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன் பிடித்து வருகின்றன.
இந்த நிலையில் அகலம் குறைந்த பகுதி என்பதாலும், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் நடக்கும் பகுதி என்பதாலும் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் சம்பவங்களும், அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடப்ப துண்டு.
எனினும் சமீப காலமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. இதில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டுமின்றி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்குதல் போன்ற கடுமையான ஷரத்துகள் இடம் பெற்றிருந்தன.
இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்களும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இதேபோல் 2014-ல் 164 படகுகள், 2015-ல் 71 படகுகள், 2016-ல் 51, 2017-ல் 84, 2018-ல் 14, 2019-ல் 41, 2020-ல் 9, 2021-ல் 19, 2022-ல் 34, 2023-ல் 34, 2024-ல் 39 படகுகள் என மொத்தம் 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 365 படங்களை அந்நாட்டு அரசு நீதிமன்ற உத்தரவுபடி நாட்டுடமையாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி இந்த விவரங்கள் கிடைத்துள்ளது.
அங்கு 193 படகுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும் அவற்றில் 21 படகுகள் விடுவிக்கபட்ட பின்னரும் மீதி படகுகள் அங்கேயே உள்ளன. இவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
- தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளன.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.
இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு மிக மிக கடுமையான அபராதத் தொகை விதிப்பது, 6 மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது, பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுடைமையாக்கிவிடுவது என்கிற அட்டூழியங்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மொட்டை அடித்து அனுப்பியது. இதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டில் மட்டும் இதுவரை இலங்கை கடற்படையினர் மொத்தம் 554 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், 72 மீன்பிடி படகுககள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மீனவர்களில் பலர் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தினார். பிறகு, " மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசியதாக கூறிய பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகவும், தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.
இரு நாட்டு முக்கிய புள்ளிகளும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த விவகாரத்திற்கு அரசு நிரந்தர தீர்வு காணும் தேதி எப்போது என்று மீனவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.