search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியுறவு"

    • ராணுவ இடைக்கால ஆட்சியில் பாகிஸ்தான் சார்புடைய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம்
    • ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும் வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது

    வங்காளதேச வன்முறை 

    வங்காள தேசத்தில் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

     

    இந்தியாவுக்கு எதிரான மனநிலை 

    எனவே ஆட்சி மாற்றத்துடன் காட்சிகள் மாறுவதும் தவிர்க்க முடியாததாகி உள்ளது. அமையவுள்ள ராணுவ ஆட்சியால் இதுவரை இருந்துவந்த இந்தியா உடனான வங்காள தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது.

    இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பந்தமும், பாதுகாப்பு தொடர்பான நல்லுறவும் ஷேக் ஹசீனா ஆட்சியில் வலுவடைந்தது. ஹசீனா இந்தியாவோடு அதிக நெருக்கம் காட்டுவதும், தற்போது நடந்துள்ள போராட்டத்திற்கான காரணங்களில் ஒன்று என்ற ஊகங்களையும் அரசியல் நோக்கர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தியுள்ளது.

    ராணுவத்தின் இடைக்கால அரசு

    ராணுவத் தளபதி வகார்-உஸ்-ஜமான் தலைமையில் அமைய உள்ள இடைக்கால அரசானது எத்தகு தன்மையோடு செயல்படும் என்பதைக் கணிக்க முடியாததாக உள்ளது. வங்காள தேசம் தனக்கான அரசியல் பாதையை வருங்காலங்களில் எவ்வாறாக அமைக்க உள்ளது என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு அதன்மூலமாக வரும் சாதக பாதகங்களைக் கணிக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைமையோ அதிக பாதகங்கள் இருக்கும் என்பதையே உணர்த்துவதாக அமைந்துள்ளது.  

     

    ஹசீனாவின் இந்திய சார்பு

    1997 முதல் 2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்த ஹசீனா அதன்பின் 8 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானார். அன்றுதொட்டு தற்போது [2024 ஆகஸ்ட்]வரை பிரதமராக ஆட்சி  செய்துள்ளார் ஹசீனா. வங்காள தேசத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பிரதமரும் இவரே ஆவார். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவே ஆகும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதிகம் இல்லாமல் சமாளிக்கவும், ஸ்திரத்தன்மை கொண்ட ஆட்சியை நிலைநிறுத்தவும் இந்திய நல்லுறவு ஹசீனாவுக்கு கைகொடுத்தது. எனவே ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும்  வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளதையே பார்க்கமுடிகிறது.  

     

     பொருளாதார பாதிப்பு

    இந்தியாவின் வங்காளதேசத்தினுடனான வணிகத் தொடர்பும், வங்காளதேசத்தின் ஊடாக மேற்கொண்டுவந்த வணிகத் தொடர்புகளும் [ transit and shipment] தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த வணிக ஒப்பந்தங்களானது 2010 முதல் பேச்சுவார்த்தை மூலம் மெல்ல மெல்ல முன்னேறி 2015 ஆம் ஆண்டில் இந்தியா- வங்காள தேசத்திற்கிடையே கையெழுத்தானதாகும். எனவே தற்போது இந்த பெருமுயற்சிகள் அனைத்தும் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசின் அரசியல் முடிவுகளையே சார்ந்துள்ளது.

    ஜமாத் இ இஸ்லாமி

    வங்காளதேசத்தில் இயங்கி வரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பானது தற்போதைய போராட்டங்களில் முக்கிய பங்காற்றியது. இந்த அமைப்பு பாகிஸ்தான் சார்புடையதாக பார்க்கப்படுகிறது. அமையவுள்ள புதிய இடைக்கால அரசிலும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம் இருக்கவே செய்யும். எனவே அவர்களின் பாகிஸ்தான் சார்பு இந்தியாவுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் உள்ளது.

    சீன ஆதிக்கம்

    இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே பல்வேறு அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய எல்லை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது. அமையவுள்ள இடைக்கால அரசின்  கொள்கைகள் கணிக்க முடியாத நிலையில், சீனா நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழலும் எழுந்துள்ளது.

    நழுவும் இந்தியாவின் பிடி 

    எனவே பாகிஸ்தான், நிலைத்தன்மையற்ற வங்காள தேசம், சீன சார்பு அதிபரைக் கொண்டுள்ள மாலத்தீவு என இந்தியாவைச் சுற்றிய எல்லைகளில் இந்தியாவின் பிடி நழுவிக்கொண்டிருப்பதையே பார்க்கமுடிகிறது என்பதே புவிசார் அரசியல் உணர்த்துகிறது.

    ×