search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிழக்கு தாம்பரம்"

    • 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது.
    • நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல்.

    கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள மேம்பாலம் அருகே தொடங்கி சேலையூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம், வேங்கை வாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி வழியாக கிண்டி ஹால்டா அருகே அண்ணா சாலையில் இணைகிறது. இந்த சாலை 16.3 கிலோமீட்டர் நீளம் உடையது. மேலும் இந்த சாலை தாம்பரத்தில் இருந்து கிண்டி வரையில், ஜி.எஸ்.டி. சாலைக்கு மாற்று சாலை ஆகவும் விளங்குகிறது.

    சென்னை விமான நிலையத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் முக்கியமான வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள், தாம்பரம்- வேளச்சேரி சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.

    மேலும் தாம்பரம்- வேளச்சேரி சாலையில், புகழ்பெற்ற தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலையின் இரு பகுதிகளிலும் புதிய புதிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் பெருமளவு உருவாகி வருகிறது.

    வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பெருமளவு உள்ளதால் இந்த சாலை 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் தாம்பரம்-வேளச்சேரி சாலை 1990-ம் ஆண்டு வரை, ஒரு வழி சாலையாக இருந்தது. இதன்பின்னர் 1992-ம் ஆண்டில், இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறை இரு வழி சாலையாக விரிவுபடுத்தியது. தொடர்ந்து 4 வழிச் சாலை ஆகவும் சில ஆண்டுகளில் மாற்றப்பட்டது.

    ஆனால் இந்த சாலை நான்கு வழி சாலையாக விரிவு படுத்தப்பட்ட போது, கிழக்கு தாம்பரம் தொடங்கி கிண்டி ஹால்டா வரையில் ஒரே சீராக, சாலை விரிவுபடுத்தப்படவில்லை.

    சாலை அகலப்படுத்துவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதில், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், சேலையூர், கேம்ப் ரோடு, ஆதிநகர் உள்ளிட்ட பல இடங்களில், சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதனால் காலை மாலை நேரங்களிலும், பருவமழை நேரத்திலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மின்கம்பங்கள், அகற்றப்பட்டு தள்ளி நடப்படாததால் பல இடங்களில் சாலை ஓரத்தில் மிக அருகிலேயே மின்கம்பங்கள் உள்ளன. குறிப்பாக சேலையூர் முதல் காமராஜபுரம் வரையில் இதை போல் மின்கம்பங்கள் காட்சி அளிக்கின்றன.

    நெடுஞ்சாலைத்துறையினர் மின்கம்பத்தை அகற்றாமலேயே அதனை சுற்றிலும் சாலைகள் அமைப்பதற்கு ஜல்லிகளை கொட்டி வைத்துள்ளனர். மின் கம்பங்கள் அகற்றப்பட்ட பின்பு, சாலை போடும் பணிகள் நடைபெறும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆனால் எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட பின்பு அங்கிருந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், கேளம்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த பஸ்கள் அனைத்தும் தாம்பரம்- வேளச்சேரி சாலையை பயன்படுத்துவதால் போக்குவரது நெரிசலில் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம்- வேளச்சேரி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்து அற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு, தேவையான நிலங்கள் முழுமையாக இன்னும் வருவாய்த் துறையினர் கையகப்படுத்தி கொடுக்கவில்லை.

    இதனால் நெடுஞ்சாலை த்துறையினர், தற்போது 6 வழி சாலையாக மாற்றுவதற்கு இடவசதி உள்ள இடங்களில் மட்டும் சாலைகளை பகுதி, பகுதியாக விரிவு படுத்தி உள்ளனர்.

    மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் வரையில் சாலையை முற்றிலும் விரிவுபடுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.

    எனவே தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப்பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, `மின் கம்பங்களை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து, வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கு, ஆகும் செலவுகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு அல்லது நெடுஞ்சாலை துறை, மின்வாரியத்திற்கு முன்னதாகவே செலுத்த வேண்டும்.

    அதுமட்டுமின்றி தற்போது உள்ள மின்கம்பங்களை எடுத்து, சாலை விரிவு படுத்துவதற்கு வசதியாக ஓரத்தில் நடுவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால் அந்த சாலையோர நிலங்கள், தனியாருக்கு சொந்தமானவை ஆகும். அவற்றை முறைப்படி வருவாய் துறையினர் கையகப்படுத்தி நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கவில்லை.

    இதனால் நாங்கள் மின்கம்பங்களை தனியார் நிலத்தில் கொண்டு போய் நடுவதற்கு முடியாது. எனவே சாலையை விரிவுபடுத்துவதற்கு வசதியாக முதலில் அந்த இடங்களில் நிலங்களை கையகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை இடம் ஒப்படைத்தால் தான், அதை செய்ய முடியும் என்றனர்.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, `கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலையை விரிவு படுத்துவதற்கு வசதியாக, நிலங்களை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் தாமதம் ஆனது.

    இப்போது நில உரிமையாளர்களிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் வருவாய்த்துறை நிலங்களை கையகப்படுத்தி, ஒப்படைக்க உள்ளனர். சாலையை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றனர்.

    ×