search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாக்கிங் பயிற்சி"

    • ஜாக்கிங் பயிற்சியை பலரும் காலைப்பொழுதில்தான் மேற்கொள்வார்கள்.
    • இரவில் ஜாக்கிங் பயிற்சி செய்வதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன.

    நடைப்பயிற்சியின் அடுத்தக்கட்டமாக 'ஜாக்கிங்' அமைந்திருக்கிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு உடலை அதிகம் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று மேற்கொள்ளப்படும் கடினமான பயிற்சிகளை போன்று சிரமப்பட வேண்டியதில்லை. அதே வேளையில் எளிமையான முறையில் கலோரிகளையும் ஓரளவுக்கு எரித்துவிடலாம். இதனை மேற்கொள்வதற்கு தரமான, பொருத்தமான காலணிகள் இருந்தால் போதுமானது.

    இந்த ஜாக்கிங் பயிற்சியை பலரும் காலைப்பொழுதில்தான் மேற்கொள்வார்கள். ஜாக்கிங் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சோம்பேறித்தனம் காரணமாக காலையில் அதனை தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்ளலாம். இரவு நேர ஜாக்கிங் பயிற்சியின் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    * இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஜாக்கிங் செய்யும்போது உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும். உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும். கலோரிகளை எளிதாக எரிப்பதற்கும் வித்திடும். காலையில் வெறும் வயிற்றில் ஜாக்கிங் மேற்கொள்வது சவாலாக இருக்கும். அதனை விரும்பாதவர்களுக்கு இரவு நேர ஓட்டம் ஏற்றதாக இருக்கும். ஆனால் இரவு சாப்பிட்ட உடனேயே ஜாக்கிங் செய்யக்கூடாது.

    * இரவு நேரத்தில் ஓடுவது அதிகப்படியான ஆற்றலை எரிப்பதற்கும் உதவிடும்.

    * இரவில் ஓடும்போது தசைகளுக்கும் பலம் சேர்க்கும். அவை வேகமாக வலுவடைவதற்கு உதவும். தசைகள் தளர்வடைவதற்கும் உதவும் என்பதால் இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவிடும்.

    * இரவில் ஜாக்கிங் செய்வது மனநிலையை அதிகரிக்கச் செய்யும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுவதற்கும் வழிவகுக்கும். அதன் மூலம் மனக்கவலை, மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வைக்கும். மனக்குழப்பத்தை விலக்கி அடுத்த நாள் சிறப்பாக திட்டமிடுவதற்கும் வழிவகை செய்யும்.

    * பகல் நேரத்தை விட இரவில் ஓடும்போது சுற்றுச்சூழலை சூழ்ந்திருக்கும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் நேரம் ஓடுவதற்கும் துணை புரியும்.

    * காலையில் அலாரத்துடன் போராடி எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் குறைவாக நேரமே ஜாக்கிங் செய்பவர்கள் இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கலாம். இரவில் அதிக நேரம் ஓடியும் பயிற்சி பெறலாம்.

    * இரவில் ஜாக்கிங் பயிற்சி செய்வதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. பகலை விட இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் ஓடும் பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பள்ளங்கள், கற்கள் சிதறி கிடந்தால் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் கவனமாக ஓட வேண்டும்.

    ×