search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி"

    • தினமும் 3 ஆயிரம் முதல் 3,200 துணிகள் சலவை செய்யப்படுகின்றன.
    • ஒவ்வொரு எந்திரமும் 100 கிலோ எடை கொள்ளளவு கொண்டது.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயன்படுத்தும் துணிகளை சலவை செய்ய தனியாக பணியாளர்கள் உள்ளனர். இந்த மருத்துவ மனையில் தினமும் 3 ஆயிரம் முதல் 3,200 துணிகள் சலவை செய்யப்படுகின்றன.

    இந்த துணிகளை சலவை செய்வதற்காக 10 நீராவி எந்திரங்கள் உள்ளன. இவற்றில் 6 நீராவி எந்திரங்கள் ஆங்கிலேயர் காலத்து நீராவி சலவை எந்திரங்கள் ஆகும். மீதமுள்ளவை நவீன கால எந்திரங்கள் ஆகும்.

    ஆங்கிலேயர் காலத்து சலவை எந்திரங்கள் பெல்ட் மூலம் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு எந்திரம் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மற்ற எந்திரங்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக எந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கடந்த வாரம் வரை மேலும் ஒரு எந்திரம் இயங்கியது.

    தற்போது அதன் கியர் பழுதடைந்துள்ளது. பழுது பார்க்கும் பணிக்காக அந்த எந்திரம் காத்திருக்கிறது. மேலும் மற்ற எந்திரங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சலவை பணியாளர்கள் கூறியதாவது:-

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆங்கிலேயர் காலத்து எந்திரத்திலேயே சலவை செய்ய மிகவும் பிடித்துள்ளது. இந்த எந்திரங்கள் 1947-ம் ஆண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது.

    சுமார் 77 ஆண்டுகளாக ஆங்கிலேயர் காலத்து நீராவி எந்திரங்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் துணிகளை துவைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த எந்திரம் பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்கிறது. மேலும் அதிக துணிகளையும் சலவை செய்யும்.

    இந்த எந்திரம் பித்தளை மற்றும் துருப்பிடிக்காத எக்கு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மிகவும் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு எந்திரமும் 100 கிலோ எடை கொள்ளளவு கொண்டது. ஒரு சுற்றுக்கு 75 முதல் 90 துணிகளை சலவை செய்கிறோம். இதற்கு 40 முதல் 45 நிமிடங்கள் ஆகும்.

    மருத்துவமனையில் பயன்படுத்தும் துணிகளில் 60 சதவீத துணிகள் இந்த எந்திரங்களிலேயே சலவை செய்யப்படுகின்றன. இந்த எந்திரங்களை பராமரிக்க தனியாக என்ஜினீயர் ஒருவரும் இருக்கிறார். ஆங்கிலேயர் காலத்து எந்திரங்களை இயங்க வைக்க நாங்கள் முடிந்தவரை முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    லண்டனில் இருந்து இயக்கப்பட்ட 3 எந்திரங்களில் 2 எந்திரங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. நீராவியில் சலவை செய்யும் பணிகள் தினமும் 8 மணிக்கு தொடங்குகிறது. ஆங்கிலேயர் காலத்து எந்திரங்களில் துணிகளை துவைக்க நாங்கள் பழகி விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×