search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாதிக்காய் சாகுபடி"

    • ஜாதிக்காய் சாகுபடி செய்வது குறித்து ஜாதிக்காய் விவசாயி ரசூல் மொய்தீன் பகிர்ந்துள்ளார்.
    • அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.

    விவசாயத்தில் தெளிவான திட்டமிடலும், புரிதலும் இருந்தால் ஜாதிக்காயிலும் சாதிக்கலாம் என நிருபித்திருக்கிறார் திண்டுக்கல் விவசாயி ரசூல் மொய்தீன்.

    சமவெளியில் மரவாசனை பயிர்கள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்பவர்களின் கருத்தை பொய்யாக்கியுள்ளது இவருடைய குறுங்காடு.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இவரின் 100 ஏக்கர் நிலம். அங்கு ஆயிரக்கணக்கில் தென்னை மரங்கள் வளர்ந்து நிறைந்துள்ளன. அங்கு, நான்கு தென்னைக்கு நடுவே ஒரு ஜாதிக்காய் மரம் வைத்துள்ளார்.

    சமவெளியில் ஜாதிக்காயை வைத்து பார்ப்போமே என்ற நம்பிக்கையில் ஆரம்பத்தில் தொடங்கியுள்ளார். ஆனால் வளர்த்த பின் பிரதான பயிரான தென்னையை விடவும் ஊடுபயிரான ஜாதிக்காயில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    பல அடுக்கு சாகுபடி முறையில் ஒரு குறுங்காட்டையே உருவாக்கியிருக்கும் ரசூல் அவர்களிடம் இந்த ஜாதிக்காய் மரங்களை எப்படி பராமரிக்கிறீர்கள் என கேட்ட போது,

    "பொதுவாகவே ஜாதிக்காய் மரங்கள் 6ம் வருடத்திலிருந்து காய்ப்புக்கு வரும். ஆண்டு கூடக் கூட அதனுடைய காய் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.

    என்னுடைய பிரதான பயிரான தென்னையில் ஒரு மரத்திலிருந்து ரூ.300/- கிடைப்பதே அதிகம் என்ற நிலையில், ஒரு ஜாதிக்காய் மரத்திலிருந்து ரூ.3,000/- முதல் ரூ.5,000/- வரை கிடைக்கிறது.

    அதிலும் குறிப்பாக எந்த செலவுமின்றி கிடைக்கிறது. இந்த மரத்திற்கென்று எந்த பிரத்தியேக பராமரிப்பும் தேவையில்லை. எந்தவிதமான பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை.

    மாறாக மகசூலை அதிகரிக்க மட்டும் அவ்வப்போது எள்ளு புண்ணாக்கு , இதர புண்ணாக்குகள் மற்றும் மாட்டு சாணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். ஜாதிக்காயால் செலவில்லை, வருவாய் அதிகம் மற்றும் நிலமும் சுத்தமாக இருக்கிறது" என்றார்.

    ஜாதிக்காயை சாகுப்படி செய்து அவர் அதை எப்படி சந்தைப்படுத்துகிறார் எனக் கேட்ட போது,"பொதுவாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்து விடுவார்கள். ஆனால் அதை விற்பனை செய்யும் போது ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கமிஷன் அடிப்படையில் உற்பத்தியை கொடுத்து விடுவார்கள்.

    கமிஷன் அடிப்படையில் கொடுக்கிறபோது, அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்கும் சூழல் வரும். பொதுவாக தக்காளி, உருளை மற்றும் மாங்காய் போன்ற காய்கறிகளுக்கு இந்த சூழல் அடிக்கடி வரும்.

    ஆனால் ஜாதிக்காயை பொருத்தவரை அதன் தோல், கொட்டை மற்றும் பத்திரி இவற்றை பிரித்து காயவைத்து பராமரித்தால் விலை வரும் போது விற்றுக் கொள்ளலாம். இன்றே விற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. காரணம் அது கெடும் பொருள் அல்ல, எனவே லாபம் வரும் போது விற்கலாம்" என்றார்.

    அதுமட்டுமின்றி இதன் நன்மைகள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், "திண்டுக்கல் மழை தடுக்கப்பட்ட மாவட்டம். சில சமயங்களில் 41 டிகிரி வெயில் கூட இருக்கும். ஆனாலும் என் மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சமவெளியிலும் மிக அழகாக காய்க்கின்றன. மேலும், இப்படி பல அடுக்கு முறையில் சாகுபடி செய்வதால் மற்ற நிலங்களை காட்டிலும் நம் நிலம் கூடுதல் குளுமையாக ஈரப்பதத்துடன் இருக்கிறது. எனவே அனைத்து விவசாயிகளும் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வது அவர்களின் வருவாயை அதிகரிக்கும். குறிப்பாக ஜாதிக்காய் பயிரிடுவதால் ஏராளமான லாபமும் நன்மையும் இருக்கிறது" எனக் கூறினார்.

    ஈஷா சார்பில் நடைபெறும் "சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் நடக்க உள்ளது.

    அதில் ரசூல் மொய்தீன் அவர்கள் ஜாதிக்காய் சாகுபடி குறித்த இன்னும் பல பயனுள்ள தகவல்களை நேரில் பகிர இருக்கிறார். இவரை போலவே இன்னும் பல வெற்றி விவசாயிகள் சமவெளியில் மரவாசனைப் பயிர்களை வளர்க்கும் உத்திகளை, முறைகளை விளக்கி சொல்ல உள்ளனர்.

    மேலும், வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.

    இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×