search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை உயர்நீதிமன்றம்"

    • ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள்.
    • விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உயிர் நாடியாகக் கருதப்படும் புறநகர் ரெயில் சேவையானது, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆபத்தானதாக முடிகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ரெயிலை பிடித்து வேலைக்கு செல்ல அவசர அவசரமாக புறப்படுவதால் ரெயில்களில் இருந்து விழுந்து அல்லது தண்டவாளத்தில் ஏற்படும் பிற விபத்துகளால் பயணிகள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.

    பயணிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்பிரச்சனையை மிக தீவிரமான பிரச்சனையாக கருதி கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, யத்தின் யாதவ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கடந்த 2023-ல் 2,590 பயணிகள் ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தனர்; ஒவ்வொரு நாளும் ஏழு பேர் பலியாகின்றனர். இதே காலகட்டத்தில் 2,441 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 1,650 பேரும், மேற்கு ரெயில்வே பிரிவில் 940 பேரும் உயிரிழந்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அமித் போர்கர்ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'மும்பையின் நிலைமையை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.

    இவ்விஷயத்தில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயின் உயர் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், எதையும் செய்ய முடியாது என்று கூறக்கூடாது.

    ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள். இவ்வாறு பயணிகள் பயணிக்க நிர்பந்திக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மேற்கு மற்றும் மத்திய ரெயில்வேயின் பொது மேலாளர்கள், இவ்விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இதையடுத்து இவ்வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மும்பையின் புறநகர் ரெயில்களில் கடந்த ௨௦ ஆண்டுகளில் 51,000-க்கும் மேற்பட்டோரும், தினசரி 7 பேரும் உயிரிழப்பதாக மேற்கு ரெயில்வே மற்றும் மத்திய ரெயில்வே ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தரவுகளை சமர்ப்பித்துள்ளன.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது மற்றும் ரெயில் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவை அதிக இறப்பு எண்ணிக்கைக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளன. மற்ற காரணங்களாக மழைக்காலங்களில் நீர் தேங்குவது, தண்டவாளங்களில் குப்பை தீப்பிடிப்பது, பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் ஃபுட்போர்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் ஆகியவை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×