search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஎஸ் சந்திரசேகரன்"

    • பலரின் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • தன் மீதான பாலியல் வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று நடிகர் முகேஷ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

    அவர்கள் மலையாள திரையுலக நடிகைகள் மற்று பெண் கலைஞர்கள் பலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தனர். அந்த அறிக்கை 4 ஆண்டுகளுக்கு பிறகு கேரள அரசு தற்போது வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    விசாரணை அறிக்கை வெளியான நிலையில், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக புகார் தெரிவித்தனர். அவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது நேரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழுவினர் புகார் கூறிய நடிகைகளிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றது.

    அதன் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, இடைவேள பாபு, பாபுராஜ், இயக்குனர் ரஞ்சித், காங்கிரஸ் நிர்வாகி வக்கீல் வி.எஸ். சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் மீது கேரளாவில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன.

    பலரின் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. மலையாள சினிமா துறையில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் முறைகேடு தொடர்பான புகார்கள் மீது மொத்தம் 17 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

    வழக்கு பதியப்பட்டுள்ள நடிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் கேரள போலீசார் ஈடுபட்டுள்ளனர். அறத்கான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆதாரங்களை சேகரிப்பதற்காக கொச்சியில் உள்ள அம்மா அலுவலகம், கத்திரிக்கடவில் உள்ள ஓட்டல், போர்ட் கொச்சியில் உள்ள ஓட்டல் உள்பட பல இடங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். அதில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் சில ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

    இந்த சூழலில் தங்களின் மீதான பாலியல் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்க புகார் கூறப்பட்டிருக்கும் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் தயாராகினர். தன் மீதான பாலியல் வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று நடிகர் முகேஷ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த கோர்ட்டு, அதன் மீதான மறு விசாரணை 2-ந்தேதி (அதாவது இன்று) நடக்கும் எனவும், அதுவரை அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் நடிகர் முகேசை 5 நாட்களுக்கு கைது செய்ய முடியாக நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் நடிகர் முகேசின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்பது தெரியவரும். அதேபோல் காங்கிரஸ் பிரமுகர் வி.எஸ். சந்திரசேகரனின் முன்ஜாமீன் மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

    இவர்கள் இருவருக்கும் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்குமா? அல்லது அவர்களது மனுவை தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. நடிகர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கோர்ட்டு உத்தரவை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணை குழு முடிவு செய்திருக்கிறது.

    ×