என் மலர்
நீங்கள் தேடியது "சம்யுக்தா ஆதித்தன்"
- லயோலா கல்லூரி கருத்தரங்கில் நேச்சுரல்லி நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
- முடிவுகளை பற்றி கவலைப்படாதீர்கள். அதன்மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவம் தான் முக்கியம்.
இன்று சென்னை லயோலா கல்லூரியில் பெண்கள் தொழில்முனைவோர் நலச்சங்கம் மற்றும் பெண்கள் சேவா சங்கம் சார்பாக பெண்களின் முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பெண்கள் தொழில்முனைவோர் நலச்சங்கம் மற்றும் பெண்கள் சேவா சங்கத்தின் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அறிமுக உரை ஆற்றினார்.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஆர்பிஐ மண்டல இயக்குநர் உமா சங்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
மெகா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஜெயந்தி தங்கபாலு மற்றும் லயோலா கல்லூரியின் முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்வி குழும நிறுவனங்களின் இணை செயலாளர் ஸ்ரீதேவி தேவ் ஆனந்த் மற்றும் நேச்சுரல்லி நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய சம்யுக்தா ஆதித்தன், "இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. வெற்றியை குறித்து நான் பேசுகிறேன். வெற்றி என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் என்ன சொல்கிறோம், என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பது தான் நம்மை தீர்மானிக்கிறது.
நம்முடைய வேலைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் நம்மை நம்பி வேலை செய்தால் சாதிக்கலாம். நமக்கு நடக்க வேண்டியது கண்டிப்பாக கடக்கும். முடிவுகளை பற்றி கவலைப்படாதீர்கள். அதன்மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவம் தான் முக்கியம்.
நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதை நிறுத்தி விடுங்கள். இன்று நம்மால் எத்தனை பேர் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்ற கேள்வியை கேட்டு பாருங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சியை நமக்கு தரும். என்னுடைய பார்வையில் வெற்றி என்பதற்கான விளக்கம் இதுதான். இங்குள்ள அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் இந்த வெற்றியை அடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.