search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலங்குகள் கொழுப்பு"

    • சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றச்சாட்டு.
    • பலகோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெய் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும் கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமளா ராவ் நியமிக்கப்பட்டார்.

    அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.

    அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தார். பரிசோதனை அறிக்கையில், "நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது. இது தரமற்ற நெய் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து முந்தைய ஆட்சியின் கொள்முதல் டெண்டரை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. கடந்த ஆகஸ்ட் முதல் அனைத்து பிரசாதங்களுக்கும் கர்நாடக அரசின் நந்தினி நெய் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஆட்சியில் பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட தாக சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்ய அறிக்கை தயாராகி வருகிறது.

    இந்தநிலையில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

    நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில், 4 ஆகம ஆலோசகர்கள், பிரதான அர்ச்சகர் வேணு கோபால தீட்சிதர், இணை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது கோவிலை சுத்தப்படுத்தி யாகம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. அதன்படி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மகா சாந்தி யாகம், சாந்தியாகும் மகா சம்ராக்ஷண யாகம் நடத்த உள்ளனர்.

    இதற்கிடையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    ஏழுமலையான் விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புகழை குலைப்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் கடந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தோன்றுகிறது.

    ஏழுமலையான் விஷயத்தில் நான் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பேன். ஒருபோதும் நாங்கள் தவறிழைக்க மாட்டோம். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசின் நடவடிக்கையால் பலகோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. அந்த பக்தர்களில் நானும் ஒருவன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×